அமெரிக்காவில் கதிரியக்க குண்டுகளை வெடிக்க ஈரான் திட்டம்: மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி 28 தொடங்கி ஏழு மாதங்களாக தொடர்ந்து வருகிறது
Trump
Published on: 
Summary

அமெரிக்காவில் கதிரியக்க குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஒரு விலையை ஈரான் கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி 28 தொடங்கி ஏழு மாதங்களாக தொடர்ந்து வருகிறது.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வலியுறுத்தியும், ஈரான் தனது அணு ஆயுத சோதனையை நிறுத்த வலியுறுத்தியும் அமெரிக்கா நிபந்தனை விதித்து வருகிறது.

இதையடுத்து பஹ்ரெய்னின் ஷேக் ஈசா விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க ராணுவ ரேடார் நிலையம் மீது ட்ரோன்களை கொண்டு ஈரான் நேற்று தாக்குதலை நடத்தியது.

அமெரிக்காவின் ராணுவ ஆளில்லா விமானங்கள் தங்கள் வான்வெளியில் மீண்டும் அத்துமீறி நுழைந்ததற்கு பதிலடியாகவே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை தெரிவித்திருந்தது.

இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவின் மீது, அமெரிக்கா தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்தது.

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஈரான் தெற்கு ஹார்கோஸ்கான் மாகாணத்தின் துணை மாகாண ஆளுநர் அஹ்மத் நஃபீசி கூறுகையில், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக நிலையங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக,அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கதிரியக்க தாக்குதல்களை நடத்த ஈரான் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டனில் கதிரியக்க குண்டுகளை வெடிக்க செய்வதன் மூலம், டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளை குறிவைக்க ஈரான் திட்டமிட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த வகையான தாக்குதல் மூலம், கதிர்வீச்சு பாதிப்பை பல மைல் தொலைவிற்கு அப்பால் கூட காற்றில் பரப்ப முடியும்.

இதன்மூலம் முக்கிய அதிகாரிகளை நோய்வாய்ப்படுத்தவும், அந்த பகுதிகளில் வசிக்கும் மனிதர்களை வாழ தகுதியற்றவர்களாகவும் மாற்ற முடியும்.

வழக்கமாக போருக்கு பயன்படுத்தப்படும் குண்டுகளை விட, இந்த கதிரியக்க குண்டுகளை தயாரிப்பது சுலபமாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த குண்டுகளை அமெரிக்காவிற்குள் கொண்டு வருவதற்கு, பயிற்சி பெற்ற நிபுணர்கள் வர தேவையில்லை; அமெரிக்காவில் வசிக்கும் ஒருவரை, இந்த தாக்குதலை நடத்த சம்மதிக்க வைத்தால் போதுமானதாக உள்ளது.

டிரம்ப்

இந்த நிலையில் ஈரான் நடத்த திட்டமிட்டிருப்பதாக தாக்குதல் குறித்து டிரம்ப் கூறுகையில், ஈரான் அமெரிக்காவை தாக்கினால் முன்னெப்போதும் இல்லாத ஒரு விலையை அவர்கள் கொடுக்க நேரிடும் என கூறினார்.

மேலும் அமெரிக்கா இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஈரான் செய்தி தொடர்பாளர்

இதையடுத்து இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என்றும், அவை சமூக ஊடகங்களால் புனையப்பட்டவை என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை தொடங்கிய அமெரிக்கர்கள், இப்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உருவாக்கி, தங்களின் தீய நோக்கங்களுக்கு அடித்தளம் அமைக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

X