

ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லராக் தீவில் செயல்பட்டு வந்த இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு, தகுந்த பதிலடி தரப்படும் என்று இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,100 கிலோ மீட்டர் தொலைவில் லராக் தீவு அமைந்துள்ளது. இந்த தீவு ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கிலும், கெஷம் தீவின் கிழக்கிலும் அமைந்துள்ளது.
மூலோபய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியில், கடல் அணுக்களை கொண்ட ராக்கெட்டுகளை ஏவுவதற்காக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையினர் ஏவுகணைகளை தயார் செய்து வருவதாக அமெரிக்கா கூறி வந்தது.
இதையடுத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணையுமாறும், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அவர் வெளியிட்ட எழுத்துப்பூர்வமான செய்தியில், “இஸ்லாமிய தேசங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது, சொல் ஒற்றுமை, நட்பு மற்றும் நன்மையின் பாதையில் ஒத்துழைப்பை தருவதாகும்.
எந்த பதவியில் இருப்பவரும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, இஸ்லாமியர்களிடையே பிளவை ஏற்படுத்தி மோதல்களை உருவாக்கும் வகையில் எதையாவது செய்தால், அவர் இஸ்லாத்தின் எதிரிகளின் நோக்கத்திற்கு பணியாற்றியவர் ஆவார்” என்று அவர் கூறினார்.
மேலும், “உங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அதன் திட்டத்தை புரிந்துகொண்டு அதை எதிர்கொள்ளுங்கள்” என்றும் அவர் கூறினார்.
முன்னதாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய கண்ணிவெடிகளை பதிக்க முயற்சித்தால், அமெரிக்கா அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு, நேற்று லராக் தீவில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை கூறுகையில், பல ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதாக தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், ஜோர்தானில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களான கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ரக் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை கூறுகையில், தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு வசதிகள் மற்றும் போர் விமான நிலைகளை இந்த ஏவுகணைகள் குறிவைத்ததாக தெரிவித்துள்ளது.