

மாதக்கணக்கில் நீடிக்கும் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் ஒரு பகுதியாக, அதிக அளவில் பெட்ரோல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கான விலையை ஈரான் உயர்த்தியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிசம்பர் மாதத்திற்கு பிறகு மேற்கொள்ளப்படும் இரண்டாவது விலை உயர்வு இது ஆகும்.
பெட்ரோல் விலை உயர்வு என்பது மக்கள் மத்தியில் உணர்வுப்பூர்வமான ஒரு விஷயமாகவும், பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடிய காரணியாகவும் அமையக்கூடியது.
2019-இல் மேற்கொள்ளப்பட்ட விலை உயர்வு நாடு தழுவிய போராட்டங்களை தூண்டியது. அதை ஒடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுடனான போரை பற்றி நேரடியாக குறிப்பிடாமல், "தற்போதைய சூழல்" காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின்படி, மாதத்திற்கு 110 லிட்டர் (29 கேலன்) என்ற ஒதுக்கீட்டிற்கு மேல் பெட்ரோல் வாங்குபவர்கள், இனி ஒரு லிட்டருக்கு 100,000 ரியால்கள் (சுமார் 7 சென்ட்) செலுத்த வேண்டும். இது டிசம்பர் முதல் அவர்கள் செலுத்தி வந்த விலையை விட இரு மடங்கு அதிகமாகும்.
உலகிலேயே மிகக் குறைந்த பெட்ரோல் விலையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஈரான் இன்னும் திகழ்கிறது. எனினும், இந்த விலை உயர்வு அந்நாட்டின் 9 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு அன்றாட செலவு சுமையை மேலும் அதிகரிக்கிறது.
ஏற்கனவே அந்நாட்டின் நாணய மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது, மேலும் மக்களின் வாங்கும் திறனும் குறைந்துள்ளது. நேற்று (திங்கள்கிழமை) ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 2.22 மில்லியன் ரியால்களாக இருந்தது.
அரசுக்கு சொந்தமான எண்ணெய் விநியோக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கெரமத் வெய்ஸ் கரமி கூறுகையில், புதிய பெட்ரோல் விலை விகிதம் 15 சதவீத நுகர்வோரை பாதிக்கும் என்று தெரிவித்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோல் நுகர்வு நாளொன்றுக்கு 145 மில்லியன் லிட்டராக (38 மில்லியன் கேலன்) உயர்ந்து சாதனை படைத்ததாகவும், அதே வேளையில் உள்நாட்டு உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 122 மில்லியன் லிட்டராக மட்டுமே இருந்ததாகவும் அவர் கூறினார். மீதமுள்ள தேவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
விலை உயர்வு அதிகப்படியான நுகர்வை குறைக்க உதவும். ஈரானில் பழைய வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களின் பயன்பாடு, அத்துடன் போதுமான பொதுப் போக்குவரத்து வசதி இல்லாமை ஆகியவை அதிக நுகர்வுக்குக் காரணமென நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.