

இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் எண்ணெயை ஏற்றிச் சென்ற ஒரு சூப்பர்டேங்கர், ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடியில் மோதி தீப்பிடித்ததில் மூழ்கியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
முக்கியமான வர்த்தக வழித்தடத்தை கடந்து சென்றபோது கண்ணிவெடிகளில் சிக்கிய இரண்டு கப்பல்களில் அதுவும் ஒன்று என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர், ஆனால் இந்த சம்பவங்கள் குறித்து சுயாதீனமான உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
பிப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கு போர் தொடங்கியதில் இருந்து, தெஹ்ரான் அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை வழியாக செல்லும் போக்குவரத்தை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளதுடன். கப்பல்கள் இஸ்லாமிய குடியரசால் அங்கீகரிக்கப்பட்ட பாதைகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
தனது அனுமதியின்றி பயணிக்கும் கப்பல்களை அது தொடர்ந்து குறிவைத்து வருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையை விதித்துள்ளதுடன், பொதுவாக உலகளாவிய எண்ணெயில் ஐந்தில் ஒரு பங்கை கொண்டுசெல்லும் நீர்வழிப்பாதையில் எண்ணெய் கப்பல்கள் பயணிக்கவும் உதவியுள்ளது.
நீர்வழிப்பாதையின் முக்கிய பாதைகளில் இருந்த அனைத்து கண்ணிவெடிகளையும் அகற்றிவிட்டதாக அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கூறியது.
"கடந்த சில மணிநேரங்களில், ஹோர்முஸ் ஜலசந்தியின் தென்பகுதியில் அனுமதியற்ற பாதையில் பயணித்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் கடற்படை கண்ணிவெடிகளில் மோதியதன் விளைவாக, பெரும் வெடிப்புகளும் தீயும் ஏற்பட்டன.
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற ஒரு சூப்பர் டேங்கர் கப்பல், பாரசீக வளைகுடாவின் தெற்கு கடற்பரப்பில் மூழ்கியது," என்று அரசு தொலைக்காட்சியில் வெளியான ஒரு அறிக்கையில் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
அது அந்த எண்ணெய் கப்பல்களின் பெயர்களையோ அல்லது அவை எங்கிருந்து வந்தன என்பதையோ குறிப்பிடவில்லை. சமீபத்திய வாரங்களில், ஜலசந்தியில் கப்பல்கள் தீப்பிடித்ததாகவும், அவை கண்ணிவெடிகளில் மோதியதாக பலமுறை கூறியும் தெஹ்ரான் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இப்பகுதியில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, அந்த நீர்வழிப்பாதையில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஆதரவளித்து வருவதுடன், கோடைக்காலத்தில் இருந்து ஹார்முஸ் வழியாக வளைகுடா நாடுகள் 1.5 பில்லியன் பீப்பாய் எண்ணெயை ஏற்றுமதி செய்ய உதவியுள்ளதாக கடந்த மாதம் தெரிவித்தது.