ஐரோப்பாவின் மிக உயர்ந்த எல்ப்ரஸ் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த இந்தியப் பெண்: மூவர்ணக் கொடியை ஏற்றி பெருமிதம்!

வீட்டுப் பொறுப்புகளை திறம்பட கவனித்துக்கொண்டே மலையேற்றத்தின் மீது கொண்ட தீராத காதலால் இந்த அரிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
Mount Elbrus
Published on
Summary

ஆகஸ்ட் 15 அதிகாலை 2 மணிக்குத் தொடங்கிய இறுதிப் பயணத்தில், உறைபனி, கடும் புயல் காற்று, இருள் மற்றும் குறைந்த ஆக்சிஜன் அளவு போன்ற கடுமையான சவால்களை ,இவர் எதிர்கொண்டார்.

மலையேறுவதில் தீவிர ஆர்வம் கொண்ட இந்தியாவின் சிவானி மெஹ்ரோத்ரா, ஐரோப்பிய கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமான எல்ப்ரஸ் மலையை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார். தெற்கு ரஷியாவில் கடல் மட்டத்திலிருந்து 5,642 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கரடுமுரடான சிகரத்தின் உச்சியை அடைந்த அவர், ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினத்தன்று நமது நாட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இமயமலைப் பயணம்

உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டு, தற்போது மும்பையில் வசித்து வரும் 43 வயதான சிவானி, 18 வயது மகளின் தாயாராவார். வீட்டுப் பொறுப்புகளை திறம்பட கவனித்துக்கொண்டே மலையேற்றத்தின் மீது கொண்ட தீராத காதலால் இந்த அரிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரப் பகுதிக்கு மேற்கொண்ட பயணமே இவருக்கு மலையேற்றத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக லடாக், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இமயமலைப் பகுதிகளுக்கும், ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ சிகரத்திற்கும் வெற்றிகரமாக மலையேற்றம் சென்றுள்ளார்.

தீவிரப் பயிற்சி

இந்த எல்ப்ரஸ் சிகரப் பயணத்திற்காக ஆகஸ்ட் 8 அன்று மும்பையிலிருந்து புறப்பட்டு, துபாய் வழியாக ரஷ்யாவின் மினரல்னி வோடியைச் சென்றடைந்தார். இறுதி இலக்கை அடைவதற்கு முன்பாக உடலை நிலைநிறுத்திக் கொள்ள 3000, 4000 மற்றும் 4700 மீட்டர் உயரங்களில் சிறப்புப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆகஸ்ட் 15 அதிகாலை 2 மணிக்குத் தொடங்கிய இறுதிப் பயணத்தில், உறைபனி, கடும் புயல் காற்று, இருள் மற்றும் குறைந்த ஆக்சிஜன் அளவு போன்ற கடுமையான சவால்களை எதிர்கொண்டார். "ருக்னா நஹி ஹாய், சல்தே ரஹ்னா ஹாய்" (நிற்கக் கூடாது, நடந்துகொண்டே இருக்க வேண்டும்) என்ற தாரக மந்திரத்துடன் வெறும் 4.5 மணி நேரத்தில் உச்சியை எட்டினார்.

செவன் சமிட்ஸ்' உலகச் சாதனை

மலையேறுவதற்கு வயது ஒரு தடையல்ல என்றும், முறையான பயிற்சியும் இலக்கை அடையும் உறுதியான எண்ணமுமே முக்கியம் என்றும் சிவானி கூறுகிறார். சொந்தச் சேமிப்பு மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன் இந்தப் பயணங்களை மேற்கொண்டு வரும் இவரது அடுத்த இலக்கு, உலகளவில் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரம் உட்பட அனைத்துக் கண்டங்களின் 7 உயர்ந்த சிகரங்களையும் ('செவன் சமிட்ஸ்') தொட்டு சாதனை படைப்பதாகும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com