

பிரதமர் மோடியிடம் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
நார்வேயில் பிரதமர் மோடியிடம் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஹெல் லிங்கின் இந்தியாவுக்கு பயணம் செய்ய இருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 12 முதல் 14 வரை ஐதராபாத்தில் தெலுங்கானா அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பாரத் உச்சிமாநாட்டில்' பங்கேற்பதற்காக லிங் இந்தியா வரவிருந்தார்.
அந்த உச்சிமாநாட்டில் 'ஊடகங்களின் எதிர்காலம்' என்ற தலைப்பில் உரையாற்ற அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
லிங் இந்தியாவுக்குப் பயணம் செய்ய செல்லுபடியாகும் ஒருமுறை நுழைவு விசாவை வைத்திருந்தார்.
நேற்று (புதன்கிழமை), அவர் ஓஸ்லோவிலிருந்து ஐதராபாத் வரும் விமானத்தில் ஏறத் தயாராகிக் கொண்டிருந்தபோது, நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.
அவரது விசா ரத்து செய்யப்பட்டதால் அவரால் இந்தியாவுக்குப் பயணம் செய்ய முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், விசா ரத்து செய்வதற்கான அதிகாரப்பூர்வ செயல்முறையை நிறைவு செய்ய, அவர் தூதரகத்திற்கு நேரில் வருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
முன்னதாக அவர் இந்தியாவுக்கு பயணிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி இருந்தபோதிலும் உள்துறை அமைச்சக தலையீட்டால் விசா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது ஆதங்கத்தை பகிர்ந்துகொண்ட லிங், "இது அதிர்ச்சியளிக்கிறது. இது ஒரு பைத்தியக்காரத்தனமான முடிவு!
இந்த வார இறுதியில் நடைபெறவிருந்த ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நான் இந்தியா வரவிருந்தேன் நான் இந்தியா வர அனுமதிக்கப்பட்டேன். அந்த அனுமதியின் அடிப்படையில்தான் விசாவும் வழங்கப்பட்டது.
ஆனால், நான் இந்தியாவுக்குள் நுழையக் கூடாது என்று கடைசி நிமிடத்தில் உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
என் விஷயத்தில் உள்துறை அமைச்சகத்தின் பங்கு என்னவென்று எனக்குப் புரியவில்லை." என்று தெரிவித்தார்.
அமைப்பாளர்களில் ஒருவரான புஷ்பராஜ் தேஷ்பாண்டே, லிங்கால் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள முடியாதது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
"ஹெல்லே லிங் நம்முடன் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள முடியாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
'ஜனநாயகத்தின் தாய்' என்று அழைக்கப்படும் ஒரு நாடு, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆட்சியில் இப்படித்தான் இருக்கிறது!" என்று அவர் தனது எக்ஸ் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மே மாதம் நார்வேயின் ஓஸ்லோ நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார்.
மோடியும் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரும் இணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அதில் அறிக்கை வாசித்த மோடி, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் செல்ல முயன்றார்.
அப்போது ஹெல்லே லியங் உரக்க, "பிரதமர் மோடி, உலகின் மிகவும் சுதந்திரமான ஊடகத்திலிருந்து சில கேள்விகளை நீங்கள் ஏன் கேட்க மறுக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கும் பதிலளிக்காமல் மோடி அங்கிருந்து அவசராமாக வெளியேறினார்.
அதோடு நிற்காமல், லிங் வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் சி.பி. ஜார்ஜிடம் கேள்விகளை எழுப்பினார்.
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு மோடி பதிலளிக்க மறுத்த முடிவு குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பினார்.