ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுக்கு இந்தியா பதிலடி!

ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு என விமர்சனம்
 Shehbaz Sharif - Petal Gehlot
Published on: 
Summary

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 81-வது அமர்வு கூட்டம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்று உரையாற்றி வருகிறார்கள்.

ஷெரீப்புக்கு பதிலடி

இதற்கிடையே ஐ.நா.சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை அல்ல.

பாகிஸ்தானுக்குரிய நீர் பங்கைத் தடுப்பதற்கோ, இடையூறு செய்வதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியா பதிலடி

இதுதொடர்பாக ஐ.நா.பொதுச்சபையில் ஐ.நா.விற்கான இந்திய நிரந்தரப் பிரதிநிதித்துவத்தின் முதல் செயலாளர் பெட்டல் கெஹ்லோட் பேசியதாவது:-

பாகிஸ்தான் பிரதிநிதியிடமிருந்து சில விசித்திரமான கருத்துகளை ஐ.நா. பொதுச் சபை கேட்டது. நியூயார்க் நகரமும் உலகமும் கொடூரமான 9/11 பயங்கரவாதத் தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு தினத்தை கடைப்பிடித்த 2 வாரங்களுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது.

ஒசாமா விவகாரம்

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் ராணுவத்தின் முதன்மைப் பயிற்சி அகாடமியின் வாசலிலேயே வசித்து வந்தார். அவருக்கு அடைக்கலம் கொடுத்த நாடு பாகிஸ்தான்.

நீண்டகால எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்பாட்டை பாகிஸ்தான் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஓடவோ ஒளிந்துகொள்ளவோ ​​இடமில்லை என்பதை கடந்த ஆண்டு நாங்கள் நிரூபித்தோம்.

பாகிஸ்தானுக்கு கண்டனம்

ஆண்டு தோறும் பொய்களை மீண்டும் மீண்டும் கூறுவதால் அவை உண்மையாகிவிடாது.

பாகிஸ்தானின் பயங்கரவாதம், வஞ்சகம் மற்றும் இரட்டை வேடம் ஆகியவை அதற்கோ உலகிற்கோ பயனளிக்காது. பகலில் பாது காப்பு பற்றிப் பேசிவிட்டு, இரவில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நடத்துகிறது. பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.

இந்தியா எச்சரிக்கை

எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்ந்தால் இந்தியா தனது தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தும். பாகிஸ்தானிடம் பயங்கரவாதம் தொடர்ந்தால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது உலகிற்கே தெரியும். இனிமையான மற்றும் ஏமாற்றும் வார்த்தைகளால் சர்வதேச சமூகத்தைத் தவறாக வழி நடத்த முடியாது.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். அது எப்போதும் அப்படியே இருக்கும் என்று கட்டமாக பேசியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com