ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: 3-வது இடத்தைத் தக்கவைத்து ‘முக்கிய வல்லரசு’ அந்தஸ்து பெற்றது இந்தியா!

இந்தியா 40.5 புள்ளிகளைப் பெற்று கடந்த ஆண்டை விட 0.5 புள்ளிகள் முன்னேறியுள்ளதுடன், 'முக்கிய வல்லரசு' அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
india
Published on: 
Summary

ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், ஆசிய பிராந்தியத்தில் 'முக்கிய வல்லரசு' என்ற உயரிய அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

லோவி இன்ஸ்டிடியூட் அறிக்கை

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், தனது '2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்' அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் செல்வாக்கு மற்றும் பிராந்திய சூழலை வடிவமைக்கும் திறனை மதிப்பிடும் வகையில் இந்தக் குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் பொருளாதாரத் திறன், ராணுவத் திறன், மீள்திறன், எதிர்கால வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்புகள், ராஜதந்திர செல்வாக்கு மற்றும் கலாச்சார செல்வாக்கு ஆகிய 8 முக்கிய அளவுகோல்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

முக்கிய நிலவரங்கள்

இந்த அறிக்கையில் இந்தியா 40.5 புள்ளிகளைப் பெற்று கடந்த ஆண்டை விட 0.5 புள்ளிகள் முன்னேறியுள்ளதுடன், 'முக்கிய வல்லரசு' அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா முறையே முதல் இரண்டு இடங்களிலும், இந்தியா 3-வது இடத்திலும், ஜப்பான், ரஷ்யா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

2018-க்குப் பிறகு தற்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சக்தி இடைவெளி மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. பொருளாதார, ராணுவ மற்றும் ராஜதந்திர துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி இதற்கு முக்கியக் காரணமாகும்.

X