இந்தியாவுக்கு ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை.. இத்தாலிய தலைவரை கண்டித்த மெலோனி ஆதரவு எம்.பி.

97 கோடி மக்கள் வாக்காளர்களாக உள்ள ஒரு நாட்டிற்கு, ஐரோப்பியர்களாகிய நாம் ஜனநாயகம் குறித்து பாடம் எடுப்பது பொருத்தமற்றது
ஜியாகோமோ பிலிபெக், டெபோரா பெர்கமினி
Published on: 
Summary

இந்தியாவுக்கு ஜனநாயகம் குறித்து ஐரோப்பியர்கள் பாடம் எடுக்கத் தேவையில்லை என இத்தாலிய நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் ஐதராபாத்தில் பாரத் மாநாடு கடந்த வாரம் நவம்பர் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இதில் 70 நாடுகளைச் சேர்ந்த 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் ஐரோப்பிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜியாகோமோ பிலிபெக் கலந்துகொண்டு பேசினார்.

ஜனநாயகம் மீது தாக்குதல்

அவர் பாஜக தலைமையிலான அரசு இந்தியாவில் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.

"வாக்குத் திருடர்களே, அரியணையை விட்டு வெளியேறுங்கள்" என அவர் அறைகூவல் விடுத்தார்.

"இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, நாம் அதைப் பாதுகாக்க வேண்டும். அதைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி, ராகுல் காந்தி மற்றும் இந்திய காங்கிரஸ் கட்சியுடன் நிற்பதுதான்" என அவர் தெரிவித்தார்.

சிரித்த ராகுல்

இதனிடையே பிலிபெக் பேசுகையில் ராகுல் காந்தி சிரித்த வண்ணம் இருந்த வீடியோக்களை பகிர்ந்த பாஜக, அந்நிய நாட்டவர் ஒருவர் இந்தியா குறித்து குற்றம்சாட்டும்போது ராகுல் சிரித்துக்கொண்டிருப்பதாக விமர்சித்தது.

ஆனால் பிலிபெக் விமர்சித்தது பாஜகவை தான் எனவும் பாஜக, இந்தியா கிடையாது என்றும் காங்கிரஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

சர்வதேச கவனம்

இந்த சூழலில் இந்த விவகாரம் சர்வதேச கவனம் பெற்றுள்ளது. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராக இத்தாலி பிரதமர் மெலோனி விளங்கி வருகிறார். ஐவரும் வலதுசாரி சித்தாந்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த சூழலில் ஜனநாயகம் குறித்து இந்தியாவுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என மெலோனியின் ஆளும் கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள மைய வலதுசாரி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா பெர்கமினி, பிலிபெக்கை விமர்சித்துள்ளார்.

உள்நாட்டு பிரச்சனை

எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு நட்பு நாட்டின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் வெளிநாட்டு அரசியல் பிரதிநிதிகள் தலையிடக் கூடாது.

இந்தியா தனது உள்நாட்டு அரசியல் தகராறுகளை தீர்த்துக்கொள்ள தனக்கென சொந்த அரசியல் அமைப்புகளையும் நீதித்துறையையும் கொண்டுள்ளது.

97 கோடி மக்கள் வாக்காளர்களாக உள்ள ஒரு நாட்டிற்கு, ஐரோப்பியர்களாகிய நாம் ஜனநாயகம் குறித்து பாடம் எடுப்பது பொருத்தமற்றது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு சிறப்பு மூலோபாய கூட்டாண்மை இருப்பதாகவும், அதன் கீழ் பல துறைகளில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவாதங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

X