

ரஷியா தனது பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாப் போன்ற நாடுகளைச் சார்ந்துள்ள நிலையில், இந்தியா ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் மாஸ்கோ உடனான உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது;
“ரஷியாவின் பொருளாதாரத்திற்கு இந்தியா, சில சமயங்களில் துருக்கி மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆதாரமாக இருக்கின்றன. இந்த நாடுகள் ரஷியாவுடனான எரிசக்தி வர்த்தகத்தை நிறுத்தினால், ரஷியா போரை நிறுத்த வேண்டியிருக்கும் என்பது அப்பட்டமான உண்மை.” என தெரிவித்துள்ளார்.
ரஷிய எண்ணெயை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு, ஏன் பாதிவரை தற்போது ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
ரஷியாவில் எண்ணெய் வாங்குவதால் இந்தியாவின் இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரட்டிப்பாக்கிய போதும், இந்தியா ரஷியாவிடம் எண்ணெய் வாங்கியது.
அமெரிக்காவின் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், ரஷியாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதற்கு காரணம் உலகளாவிய சந்தை மதிப்பும், நாட்டின் எரிசக்தி தேவையுமே என இந்தியா பலமுறை தெளிவுப்படுத்தியுள்ளது.
ரஷியாவும் இதனை தெளிவுப்படுத்தியுள்ளது. இந்தியா தனது சொந்த வளர்ச்சிக்காகவே ரஷியாவிடமிருந்து எண்ணெயை வாங்குகிறது , மாஸ்கோவுக்கு உதவுவதற்காக அல்ல என்று இந்தியாவுக்கான ரஷியத் தூதர் டெனிஸ் அலிபோவ் இந்த மாதத் தொடக்கத்தில் கூறினார்.