

சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் துருக்கி ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 2026-ஆம் ஆண்டு மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அந்நிய நாடுகள் ஏதாவது ஒரு உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் போது, மற்ற உறுப்பு நாடுகள் தாக்குதல் நடத்தும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதையடுத்து ஏமன் நாட்டில் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஏமனுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சவுதி அரேபியா மீது ஹவுதி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் நேற்று சவுதியின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில், ஹவுதிகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சவுதிக்கு ஆதரவாக ராணுவ உதவிகளை வழங்குவதாக துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் தெரிவித்தார்.
மேலும் அவர் மெக்கா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராணுவ கடமைகளை நிறைவேற்றுவதில் துருக்கி நாட்டிற்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மூத்த ஹவுதி அதிகாரி முகமது அல்-புகைதி பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மற்றும் துருக்கி மேற்கொள்ளும் நேரடி ராணுவ தலையீடு, கடுமையான ராணுவ நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என எச்சரித்தார்.
சவுதி தலைமையிலான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார தடைகளுக்கு எதிராக தாங்கள் தற்காப்பு நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், சவுதிக்கு ஆதரவாக பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்தால், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு இரும்புக்கரம் கொண்டு பதிலடி கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ராணுவ செயல்பாடுகளை தவிர்த்து, இரு நாட்டினரும், இந்த போரில் தலையிடாமல் இருக்கும்படியும் அவர் எச்சரித்துள்ளார்.