

சவுதி அரேபியா மீதான தங்களது தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள 51 பில்லியன் டாலர்களும், ஏமனின் அதிகாரப்பூர்வ ஆட்சியாளர்களாக தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும் ஹவுதிக்கள் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சவுதியின் பல ஆண்டுகால தாக்குதல்களையும், நீண்டகால முற்றுகையையும் ஈடுகட்ட இந்தத் தொகை போதுமானது என்று ஹூதிக்கள் தெரிவித்ததாகவும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
சவுதியின் எண்ணெய் கிடங்குகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள்மீது ஹவுதிகள் அண்மைக்காலமாக தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கடந்தமாதம் முழுவதும் தினசரி தாக்குதல்களை மேற்கொண்டனர்.
மேலும் ஏடனிலிருந்து சுமார் 50 மைல் தொலைவிற்குள் ஹவுதிகள் நகர்ந்துள்ளனர்; இது 2015-ஆம் ஆண்டிற்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கமானதாகும்.
இந்த தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர சவுதி அரேபியா பேச்சுவார்த்தை நடத்தியபோது ஹவுதிகள் இந்த கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
அதேசமயம், பேச்சுவார்த்தை நடத்த பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக சவுதி தரப்பில் ஒரு பில்லியன் டாலர் நிதி வழங்க முன்வந்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.