ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில் ஏமன் அரசு படைகளை சேர்ந்த 30 பேர் பலி

சவுதி ஆதரவு படைகள் குவிக்கப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
Houthi Attacks
Published on

ஏமனின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில், குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஏமன் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்கள் அரசுப் படையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி ஆதரவு பெற்ற படைகளை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் "நூற்றுக்கணக்கானோர்" கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்றும் ஹவுதி தலைவர் ஒருவர் கூறினார்.

தீவிர தாக்குதல்:

மாரிப் மற்றும் ஹத்ரமவுத் மாகாணங்களில் உள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளின் முகாம்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஏமன் அதிகாரிகள் தெரிவித்தனர். ஊடகங்களிடம் பேச அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாததால், அவர்கள் தங்கள் பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் இத்தகவலை தெரிவித்தனர்.

ஏமனில் ஹவுதிகளுக்கும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசை ஆதரிக்கும் சவுதி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நடைபெற்ற பெரும் சண்டையை நிறுத்திய ஏப்ரல் 2022-இன் நடைமுறை போர்நிறுத்தத்திற்கு பிறகு, இந்த தாக்குதல்கள் மோதலின் தீவிரத்தை வெகுவாக அதிகரித்துள்ளன.

ஹவுதிகளின் தாக்குதல்களால் தங்கள் படையில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டதாக மட்டுமே ஏமன் ராணுவம் பொதுவெளியில் தெரிவித்தது; ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அது குறிப்பிடவில்லை.

பதிலடி நடவடிக்கை:

மாரிப் மற்றும் ஹத்ரமவுத் மாகாணங்களில் உள்ள முகாம்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், கிழக்கு ஏமனில் சவுதி ஆதரவு படைகள் குவிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே இவை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஹவுதி பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சரீ தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்களில் "சவுதி தரப்பு கூலிப்படையினர் நூற்றுக்கணக்கானோர்" கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என்றும், முகாம்கள், கிடங்குகள், ராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டன என்றும் ஹவுதி தலைவர் கூறினார்.

"எங்கள் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், சவுதியின் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ளுமாறும், சவுதி படைகள் எங்கு குவிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று சரீ தனது உரையில் குறிப்பிட்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com