

அமெரிக்காவின் மாசசூ செட்ஸ் மாகாணத்தில் உள்ள ஆக்டன் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுதா வெங்கடேசன் (வயது 45), தனது கணவர், மகன்கள் அர்ஜூன் அரவிந்த் (17), சித்தார்த் அரவிந்த் (14) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சுதா வெங்கடேசனும், சித்தார்த் அரவிந்தும் பிணமாக கண்டெடுக்கபட்டனர்.
அவர்களது வீட்டுக்கு வந்த டியூசன் ஆசிரியர், அழைப்பு மணியை நீண்ட நேரம் அழுத்தியபோதும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவர் சுதா வெங்கடேசனின் கணவரை போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். உடனே அவரும் தனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயன்றனார்.
ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. இதனால் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அந்த வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு முதல் தளத்தில் சித்தார்த் அரவிந்தும், கீழ் தளத்தில் உள்ளஅறையில் சுதா வெங்கடேசனும் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களில் காயங்கள் இருந்தன.
வீட்டில் மூத்த மகன் அர்ஜூன் அரவிந்த் இல்லை. விசாரணையில் தாய்- சகோதரனை அர்ஜூன் அரவிந்த் கொலை செய்ததும், பின்னர் தனது தாயின் காரில் தப்பி சென்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் சுதா வெங்கடேசனின் கணவர் காலையில் வேலைக்கு சென்றபிறகு நடந்து உள்ளது.
தப்பி சென்ற அர்ஜூன் அரவிந்தை போலீசார் தீவிரமாக தேடினர். மாசசூ செட்சின் வேய்லாண்டில் உள்ள ஒரு வாகன நிறுத்து மிடத்தில் இருந்த அர்ஜூன் அரவிந்த்தை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதில் உயர்நிலைப்பள்ளி மாணவரான அர்ஜூன் தனது குடும்பத்தைக் கொல்வது தொடர்பான யோசனைகள் அல்லது கருத்துகளை இணையத்திலும் சாட்ஜிபிடியிலும் தேடி உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தாய்-தம்பியை கொலை செய்வதற்கு அர்ஜூன் அரவிந்த் எந்த ஆயுதத்தை பயன்படுத்தினார் என்ற தகவலை போலீசார் வெளியிடவில்லை.