கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு: இருவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம்

வெள்ளப்பெருக்கு குறித்துத் தகவல் அறிந்ததும், தேசிய பூங்கா மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன மீட்புக் கருவிகள் மூலம் களத்தில் இறங்கினர்.
Canyon  Flash floods
Published on

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கிராண்ட் கேன்யன் தேசிய பூங்காவில் வீசிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கிராண்ட் கேன்யன் தேசிய பூங்கா பகுதியில் திடீரென வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பிரைட் ஏஞ்சல் என்ற இடத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து மிக வேகமாக அதிகரித்ததால், ஆற்றின் கரையோரங்களில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

டெக்சாஸ் மருத்துவர் பலி

இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 46 வயதான பிரபல உடலியக்க பிசியோதெரபி மருத்துவர் ஜான் ஜியுஸ்டி என்பவரும் அடங்குவார். இவர் தனது நண்பர்களுடன் மீன்பிடித்தல் மற்றும் மலையேற்றப் பயிற்சிக்காக இங்கு வந்திருந்தபோது, வெள்ளத்தின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். மேலும் மற்றொரு ஆண் சுற்றுலாப் பயணியின் உடலும் கொலராடோ ஆற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

80 பயணிகள் மீட்பு

வெள்ளப்பெருக்கு குறித்துத் தகவல் அறிந்ததும், தேசிய பூங்கா மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன மீட்புக் கருவிகள் மூலம் களத்தில் இறங்கினர். இரவு நேரத்திலும் சிறப்புப் பார்வை சாதனங்களைப் பயன்படுத்தி தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்ட அவர்கள், வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 80 சுற்றுலாப் பயணிகளைப் பத்திரமாக மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். இருப்பினும், இன்னமும் ஒரு நபர் மாயமாகியுள்ளதால் அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முக்கிய குடிநீர் குழாய் சேதம்

திடீர் வெள்ளத்தின் காரணமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த பல மரப் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுத் துண்டிக்கப்பட்டன. பூங்காவின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் குடிநீர் விநியோகக் குழாய்கள் மிகக் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கும் குடிநீர் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை குறிப்பிட்ட பாதைகள் மற்றும் முகாம்களை பூங்கா நிர்வாகம் தற்காலிகமாக மூடியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com