

பிரம்மாண்டமான நவீனக் கட்டடங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பல தசாப்த கால பழமையான இந்த சிறிய கட்டடம் எப்படித் தப்பியது என்பது குறித்துக் கட்டிடக் கலை வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
நேபாள நாட்டின் நுவாகோட் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த வெள்ள நீர், சுற்றியிருந்த பல அடுக்குக் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் மக்களின் உடைமைகளை நொடிப் பொழுதில் அடித்துச் சென்றது.
பேரழிவின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியில், 'பிரகாஷ்' என்பவருக்குச் சொந்தமான 40 ஆண்டுகள் பழமையான பச்சை நிறச் சிறிய வீடு மட்டும் சிறிதும் சேதமடையாமல் அசைக்க முடியாமல் உறுதியுடன் நின்றது. இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த அச்சமூட்டும் தருணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய வீட்டின் உரிமையாளர் பிரகாஷ், "வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வீட்டின் கீழ் தளத்தை மூழ்கடித்தபோது, இதுதான் நமது வாழ்வின் கடைசி தருணம் என்று எண்ணினோம். இனி நாம் உயிரோடு பிழைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது" என்று கண்ணீர்மல்கக் கூறினார். நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்த குடும்பத்தினர் உடனடியாக வீட்டின் மேல் தளத்திற்குச் சென்று, சுற்றிலும் நீர் சூழ்ந்த நிலையில் உயிருக்குப் போராடியபடி மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருந்தனர்.
சுற்றியுள்ள பிரம்மாண்டமான நவீனக் கட்டடங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பல தசாப்த கால பழமையான இந்த சிறிய கட்டடம் எப்படித் தப்பியது என்பது குறித்துக் கட்டிடக் கலை வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். கட்டடத்தின் உறுதியான கட்டுமானம், அதன் வடிவம் மற்றும் வெள்ள நீரின் பிரதான ஓட்டப் பாதையில் இருந்து சற்று விலகி அமைந்திருந்த புவியியல் அமைப்பு ஆகியவையே இந்த வீடு இடிந்து விழாமல் தப்பித்ததற்குக் காரணம் என அவர்கள் கணிக்கின்றனர்.
வெள்ளத்தின் வேகம் சற்று குறைந்ததைத் தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் வீட்டின் மேல் தளத்தில் தவித்துக் கொண்டிருந்த பிரகாஷின் குடும்பத்தினரை பாதுகாப்பாக மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். பேரழிவுக்கு இடையே ஒரு குடும்பம் அசாத்தியமான முறையில் உயிர்தப்பிய செய்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்துள்ளது.