செலவுகளை கட்டுப்படுத்த முடிவு: 5 நாடுகளில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை விரிவுபடுத்திய கூகுள்!

'டீப்மைண்ட்' மற்றும் 'கூகுள் கிளவுட்' ஆகிய முக்கிய பிரிவுகள் இந்தத் திட்டத்திலிருந்து முழுமையாக விலக்கப்பட்டுள்ளன.
Google
Published on: 
Summary

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது ராஜினாமா செய்வதற்கான நிதி ஊக்கத்தொகை திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் தனது முதலீடுகளைத் தீவிரப்படுத்தி வரும் முன்னணி தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் நிறுவனம், செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது ராஜினாமா செய்வதற்கான நிதி ஊக்கத்தொகை திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.

கட்டாய ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக, விரும்பும் ஊழியர்கள் தகுந்த நஷ்டஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டு நிறுவனத்திலிருந்து வெளியேறும் இந்தத் திட்டம் சர்வதேச தொழில்நுட்ப வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிறுவனத்தின் இந்தத் திட்டத்தின் கீழ் வெளியேற விரும்பும் தகுதியான ஊழியர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் தலா ஒரு மாத சம்பளம் வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. அதிகபட்சமாக இந்தத் தொகை 12 மாதச் சம்பளம் வரை மட்டுமே வரம்புபடுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, ஐந்தாண்டுகள் பணியாற்றிய ஒரு ஊழியருக்கு ஐந்து மாதச் சம்பளம் நஷ்டஈடாக வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த ஊழியர்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்தே நிறுவனத்திலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளவுட் கணினிப் பிரிவுகளுக்கு விலக்கு

கூகுள் நிறுவனத்தின் இந்த விருப்ப வெளியேற்றத் திட்டமானது பல முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியிருந்தாலும், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிப் பிரிவான 'டீப்மைண்ட்' மற்றும் 'கூகுள் கிளவுட்' ஆகிய முக்கிய பிரிவுகள் இந்தத் திட்டத்திலிருந்து முழுமையாக விலக்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள முக்கிய பொறியியல் மையம் உட்பட பல துறைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், ஏஐ மற்றும் கிளவுட் துறைகளில் புதிய ஆள்சேர்ப்புகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என்று கூகுளின் நிதித்துறைத் தலைவர் அனாத் உறுதிப்படுத்தியுள்ளார்.

மறுசீரமைப்புப் போக்கு

செயற்கை நுண்ணறிவுத் துறையில் டேட்டா சென்டர்கள் மற்றும் அதிநவீன கணினி உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து வருகின்றன. இந்த அதீத செலவீனங்களால் முதலீட்டாளர்கள் லாபத்தைக் கோரும் சூழல் உருவாகியுள்ளது. இதன்காரணமாக, கூகுளைப் போலவே மைக்ரோசாப்ட் போன்ற பிற நிறுவனங்களும் சுமார் 60,000 ஊழியர்களை உள்ளடக்கிய விருப்ப வெளியேற்றத் திட்டங்களை அறிவித்து தங்கள் நிறுவனச் செலவுகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளன.

X