

இஸ்ரேலில் இன்று (அக்டோபர் 27) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. அரசாங்கத்தை அமைக்க, எந்தவொரு கூட்டணிக்கும் குறைந்தபட்சம் 61 இடங்களின் ஆதரவு தேவை.
பிரதமர் நேதன்யாகுவின் லிகுத் (Likud) கட்சிக்கு எதிர்க்கட்சியான இஸ்ரேல் முன்னாள் ராணுவ தலைவர் காடி ஐசென்கோட் உடைய யாசர் (Yashar) கட்சி பிரதான போட்டியாளராக உள்ளது.
சிலர் நேதன்யாகுவுக்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்க விரும்பும் வேளையில், மற்றவர்களோ 2023 ஹமாஸ் தாக்குதலுக்கு அவரின் அரசே பொறுப்பு என கருதுகின்றனர்.
கருத்துக்கணிப்பின்படி, பிரதமருக்கான மக்கள் செல்வாக்கு தரவரிசையில் நேதன்யாகுவை (38%) விட ஐசென்கோட் (43%) முன்னிலையில் உள்ளார்.
2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் நடந்த ஹமாஸ் தாக்குதலில் கிட்டத்தட்ட 1,200 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து காசாவில் இஸ்ரேலிய ராணுவம் 3 ஆண்டுகளாக நடத்திய தாக்குதலில் 74,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகளே ஆவர்.
இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேலில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதேநேரம் கடத்திச் செல்லப்பட்ட பணய கைதிகளை மீட்பதில் நேதன்யாகுவின் அரசு அணுகுமுறைக்கு எதிராக ஒரு பெரும்பான்மை மக்கள் உள்ளனர். நேதன்யாகு அரசுக்கு எதிராக அந்நாட்டில் பலமுறை போராட்டங்கள் பேரணிகள் நடந்துள்ளன.
அக். 7 தாக்குதலின் பாதுகாப்பு குளறுபடி குறித்து சுதந்திரமான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேதன்யாகு தொடா்ந்து நிராகரித்து வருகிறாா்.
அண்மையில் டெல் அவிவ் நகரில் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு, அரசுக்கு எதிராகப் போராடியது அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், காசாவை இஸ்ரேல் முழு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்று கருதும் இனவாத இஸ்ரேலியர்கள், நேதன்யாகுவுக்கு வாய்ப்பளிக்க விரும்புகின்றனர்.
எனவே ஹமாஸ் தாக்குதல் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்தல் நேதன்யாகுவுக்கு சவாலாக அமைந்துள்ளது.
அடுத்த அரசாங்கத்தை யார் அமைக்க வேண்டும் என்பதில் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடையே கூட கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இஸ்ரேல் அரசியலில் ராணுவப் பின்னடைவுகள் மிகப் பெரிய அரசியல் மாற்றங்களை உருவாக்குவது வரலாற்று மரபாகும்.
1973 யோம் கிப்பூா் போருக்குப் பிறகு, ஆளும் தொழிலாளா் கட்சி 1977இல் தனது 29 ஆண்டுகால ஆட்சியை இழக்க நேரிட்டது.
அதுவே லிகுத் கட்சியின் எழுச்சிக்கு வழிவகுத்தது. தற்போது அக்டோபர் 7 தாக்குதலுக்கு முந்தைய உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத் தோல்விகளால் நேதன்யாகுவின் பிம்பம் கடுமையாக சரிந்துள்ளது.
மேலும், மதச்சாா்பற்ற இஸ்ரேலியா்களுக்கும், பழமைவாத ‘ஹரேடி’ சமூகத்தினருக்கும் இடையிலான முரண்பாடும் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இஸ்ரேலில் பெரும்பாலான யூத ஆண்களுக்கு ராணுவச் சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மதப் பள்ளிகளில் பயிலும் ஹரேடி ஆண்களுக்கு பெஞ்சமின் நேதன்யாகு அரசு சட்டம் இயற்றி விலக்கு அளிக்க முற்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு அச்சட்டத்தை ரத்து செய்தது.
தொடா்ச்சியான போரினால் ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை நிலவும் நிலையில், இந்த விலக்கு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக, நேதன்யாகு ஏழு ஆண்டுகள் பழைமையான ஊழல் வழக்கிலும் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
தொழிலதிபர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாகவும், தங்களுக்குச் சாதகமான செய்தி வெளியீடுகளுக்கு ஈடாக ஊடகங்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டதாகவும் நேதன்யாகு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேலில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை என்றால், சிறிய கட்சிகள் அரசாங்கம் அமைப்பதற்கான வாய்ப்பை முடிவெடுக்கும்.
தேர்தலுக்குப் பிறகு, அரசாங்கத்தை அமைப்பதற்கு நேதன்யாகுவுக்கும் எதிர்க்கட்சிக்கும் மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படலாம்.
கணிப்புகளின்படி, சில சிறிய கட்சிகள் 12 முதல் 15 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.