

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறு நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது, அவர் ஜி20 நிதியமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதுடன், முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்க பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் வணிக தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
கனடாவில் நடைபெற்ற முதல் 'இந்தியா-கனடா பொருளாதார மற்றும் நிதிசார் கலந்துரையாடல்' நிகழ்வில் பங்கேற்ற பிறகு, மூன்று நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நிர்மலா சீதாராமன் சிகாகோவின் ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்திய தூதரகத்தின் துணை தூதர் நம்க்யா சி. கம்பா மற்றும் சிகாகோவிற்கான இந்திய தூதரக அதிகாரி சோமநாத் கோஷ் ஆகியோர் அவரை வரவேற்றனர்.
சீதாராமன் கனடா மற்றும் அமெரிக்காவில் ஒன்பது நாள் கூட்டுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்; இப்பயணம் செப்டம்பர் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
சிகாகோவில் தங்கியிருக்கும் காலத்தில், அவர் முக்கிய முதலீட்டாளர்களுடனான மாநாட்டில் பங்கேற்பதுடன், தனியார் துறையை சேர்ந்த முன்னணி தலைமை செயல் அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் மூத்த பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடுவார் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
இந்தியாவின் முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதார கண்ணோட்டம் மற்றும் இந்தியா-அமெரிக்கா இடையிலான வணிக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்த விவாதங்கள் இதில் இடம்பெறும்.
மேலும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள 'போல்ஸ்கி தொழில்முனைவு மற்றும் புத்தாக்க மையத்தை' பார்வையிடும் அவர், தொழில்முனைவு, புத்தாக்கம், தொழில்நுட்ப வணிகமயமாக்கல் மற்றும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் மற்றும் புத்தாக்க சூழலுடனான தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்த கருத்துக்களை பரிமாறி கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், மத்திய நிதியமைச்சர் சிகாகோவில் உள்ள இந்தியச் சமூகத்தினருடன் கலந்துரையாடுவார். அமெரிக்காவின் தலைமையில் வட கரோலினாவின் ஆஷ்வில் நகரில் நடைபெறவுள்ள ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் இந்திய குழுவிற்கு அவர் தலைமை தாங்குவார்.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் மூத்த பொருளாதார அதிகாரிகள் ஒன்றிணைந்து, முக்கிய உலகளாவிய பொருளாதார மற்றும் நிதிசார் விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறியது.