

குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த விமானிகள் இஸ்ரேலுக்கு விமானங்களை இயக்குவதை தடைசெய்யும் இஸ்ரேலின் புதிய கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக்கொள்வதாக பிரான்ஸின் முன்னணி விமான நிறுவனமான ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
“அனைத்து விமான நிறுவனங்களைப் போலவே, ஏர் பிரான்ஸ் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்காக, அது சேவை வழங்கும் நாடுகளின் அதிகாரிகளால் நிறுவப்பட்ட நுழைவு விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.
டெல் அவிவ் செல்லும் விமானங்களுக்காக இஸ்ரேலிய அதிகாரிகளால் அமல்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபிளைதுபாய் விமான சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலிய வான்வெளிக்குள் விமானங்களை இயக்கும் விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள், இஸ்ரேலுடன் தூதரக உறவுகள் இல்லாத நாடுகளின் குடியுரிமையையோ அல்லது இரட்டைக் குடியுரிமையையோ கொண்டிருக்கக் கூடாது என, இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த அக்.1ம் தேதி அன்று வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்குத் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளை உள்ளடக்கி பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தத் தடை நேரடியாக மதத்தின் அடிப்படையில் விதிக்கப்படவில்லை என்றாலும், இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்காத நாடுகள் பட்டியலில் பெரும்பாலானவை முஸ்லீம் பெரும்பான்மை நாடுகள் ஆகும்.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான், ஈரான், ஏமன், சவுதி அரேபியா, அல்ஜீரியா, துனிசியா மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் அடங்கும்.
இஸ்ரேலுடன் தூதரக உறவுகள் இல்லாத நாடுகளைச் சேர்ந்த விமானப் பணியாளர்கள் அங்கு பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்தப் புதிய உத்தரவு முக்கியமாக இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இஸ்ரேலின் புதிய கட்டுப்பாடுகளுக்கு ஏர் பிரான்ஸ் ஒப்புக்கொண்டாலும், இந்தத் தடை பிரான்ஸ் நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்களுக்குச் சவாலாக அமையலாம்.
இதனால் கட்டுப்பாடுகளின் கீழ் வழித்தடங்களில் விமானங்களை இயக்காமல் இருக்க ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்கு உரிமை உண்டு. அல்லது பிரெஞ்சு அரசாங்கம், பிரெஞ்சு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அல்லது ஐரோப்பிய ஒன்றியம் மூலம் இஸ்ரேலின் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடரலாம்.
பாதிக்கப்படும் ஊழியர்கள் இழப்பீடு கோரலாம். தொழிற்சங்கங்கள் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கலாம்.
ஏர் பிரான்ஸ் மட்டுமின்றி, அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் செக் குடியரசின் ஸ்மார்ட்விங்ஸ் ஆகிய நிறுவனங்களும் இஸ்ரேலின் இந்த புதிய பாதுகாப்பு விதிகளுக்குக் கட்டுப்பட்டு தங்களது ஊழியர் திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றன.