போர்களத்தில் இருந்து பயந்து ஓட்டம் - 66 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த காங்கோ அரசு!

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தற்போதுவரை 381 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போர்களத்தில் இருந்து பயந்து ஓட்டம் - 66 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த காங்கோ அரசு!
Published on: 

காங்கோ ஜனநாயகக் குடியரசில், பயம் மற்றும் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுத்த குற்றங்களுக்காகக் குறைந்தது 66 வீரர்களுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

கிழக்கு காங்கோவில் உள்ள வடக்கு கிவு மாகாணத்தின் வாலிகாலேவில் அமைந்துள்ள ராணுவ நீதிமன்றத்தில் 71 வீரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, 66 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு வீரர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்றொருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயுதக் குழுக்களுடன் போரிடும் வீரர்களிடையே ஒழுக்கத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏன் மரண தண்டனை?

காங்கோ அரசுப் படைகளுக்கும், மார்ச் 23 இயக்கத்தை உள்ளடக்கிய FRN (Front for the Refoundation of the Nation) குழுவிற்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவர்களுடனான மோதலின்போது, தங்கள் நிலைகளைக் கைவிட்டுத் தப்பி ஓடியதாக, தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள வீரர்கள் அக்.20 அன்று கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதமும், கிளர்ச்சியாளர்களுடனான மோதல்களின்போது முன்னணிப் பகுதியிலிருந்து பின்வாங்கியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, கோழைத்தனம் உள்ளிட்ட இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் 27 வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வீரர்களிடையே நிலவும் பொறுப்பின்மை, பயம் மற்றும் ஒழுக்கமின்மையால், ஆயுதக் குழுக்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் பலவீனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து விமர்சனங்களைப் பெற்றுவரும்நிலையில், குறைந்த ஊதியம் மற்றும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மரண தண்டனை

கடந்த 2024 மார்ச் மாதம், மரண தண்டனை மீதான 20 ஆண்டு கால தடையை காங்கோ குடியரசு நீக்கியது.

ஆயுதக் குழுக்கள், கிளர்ச்சி ஆகியவற்றில் ஈடுபடுவோர், அத்துடன் தேசத்துரோகம் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபடுவோருக்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்தது.

மரண தண்டனையை மீண்டும் அமல்படுத்தும் முடிவு, மனித உரிமை அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை எந்த மரண தண்டனையும் நிறைவேற்றப்படவில்லை.

பிரெஞ்சு ஒளிபரப்பு நிறுவனமான RFI தொகுத்த புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தற்போதுவரை குறைந்தது 507 வீரர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர், இதில் 381 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுதக் கிளர்ச்சிக் குழு

FRN (Front for the Refoundation of the Nation) என்பது காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு புதிய கூட்டணி ஆயுதக் கிளர்ச்சிக் குழுவாகும்.

இது முன்பு பரவலாக அறியப்பட்ட M23 கிளர்ச்சிக் குழு உள்ளிட்டவற்றின் மறுவடிவமாக, பல கிளர்ச்சிக் குழுக்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காங்கோ அரசாங்கத்தை வீழ்த்துவதே இக்குழுவின் முக்கிய நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த FRN குழுவின் தலைவராக காங்கோவின் முன்னாள் அதிபர் ஜோசப் கபிலா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X