‘உண்மையான எதிரி யார் என்பதை முதலில் அடையாளம் காணுங்கள்’ - வளைகுடா ஆட்சியாளர்களுக்கு மொஜ்தபா கமேனி அறிவுரை!

இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டிருந்தால், பாலஸ்தீன மக்கள் இன்று இந்த அளவுக்கு ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்களா?
‘உண்மையான எதிரி யார் என்பதை முதலில் அடையாளம் காணுங்கள்’ - வளைகுடா நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி அறிவுரை!
Published on

வளைகுடா நாடுகள் தங்களின் உண்மையான எதிரி யார் என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி.

“இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும், குறிப்பாக மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் பரிந்துரை என்னவென்றால்,

உங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அவனது திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதை எதிர்கொள்ளுங்கள் என்பதே” என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை

ஹார்முஸ் நீரிணை விவாரத்தில் ஈரான் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் வேளையில், மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்கா பக்கம் நின்று ஈரானுக்கு அழுத்தம் கொடுத்து வரும்நிலையில், மொஜ்தபாவின் இந்த கருத்துகள் வந்துள்ளன.

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளையொட்டி அவரது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ செய்தியில் இந்த முக்கியக் கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார்.

அதில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் பொதுவான மற்றும் உண்மையான எதிரிகள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களுக்கு இனி "பாதுகாப்பான புகலிடம்" இருக்காது என்றும், பிராந்திய நாடுகள் அமெரிக்காவின் ராணுவப் பாதுகாப்பிற்கு ஒரு கேடயமாகச் செயல்படக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

பாலஸ்தீன நிலை

இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே உள்ள இன, கலாச்சார, அரசியல் மற்றும் புவியியல் வேறுபாடுகளைப் பயன்படுத்தி எதிரிகள் பிளவை உண்டாக்குகிறார்கள்.

முஸ்லிம்களுக்குள் பிளவை ஏற்படுத்துபவர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ எதிரிகளுக்குத்தான் உதவுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டிருந்தால், பாலஸ்தீன மக்கள் இன்று இந்த அளவுக்கு ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்களா?" என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com