

இந்தோனேசியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 5 புகைப்படப் பத்திரிகையாளர்கள், 2 ஊழியர்கள் மற்றும் வழிகாட்டி உள்பட 8 பேர் நடுக்கடலில் மாயமாகியுள்ளனர்.
இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுண்டா ஜலசந்தி பகுதியில் 'அனக் கிரகடாவ்' என்ற எரிமலை அமைந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:53 மணிக்கு எரிமலை வெடித்து சிதறியது.
செயற்கைக்கோள் படங்களின்படி, எரிமலையிலிருந்து 20,000 அடி மற்றும் 50,000 அடி உயரத்திற்கு இரு மாபெரும் சாம்பல் மேகங்கள் எழும்பி, ஜகார்த்தா, லம்பங் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்குப் பரவின.
குடியிருப்பு பகுதிகள் எரிமலையிலிருந்து 16 கி.மீ தொலைவில் இருந்ததால் உடனடி உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.
இந்நிலையில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்புச் சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 5 புகைப்படப் பத்திரிகையாளர்கள், 2 ஊழியர்கள் மற்றும் வழிகாட்டி உள்பட 8 பேர் நடுக்கடலில் மாயமாகியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மாலை எரிமலைப் பகுதியை அடைந்துவிட்டதாக அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திக்குப் பிறகு, இதுவரை அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை.
காணாமல் போனவர்கள் முன்னணி செய்தி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆவர். நடுக் கடலில் மாயமான பத்திரிகையாளர்களைத் தேடும் பணியில் இந்தோனேசிய கட லோரப் பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
'கிரகடாவ்வின் குழந்தை' என்று அழைக்கப்படும் அனக் கிரகடாவ் எரிமலை, 1883 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய 'கிரகடாவ்' எரிமலை வெடிப்பிற்குப் பிறகு, 1927 ஆம் ஆண்டில் கடலுக்கு அடியில் இருந்து புதிதாக உருவாகத் தொடங்கியது.
2018ஆம் ஆண்டில் இந்த அனக் கிரகடாவ் எரிமலை வெடித்தபோது, அதன் ஒரு பகுதி கடலுக்குள் சரிந்து விழுந்து ஏற்பட்ட நிலச்சரிவால் பயங்கரச் சுனாமி உருவானது. இதில் சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் 430க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அன்றிலிருந்து இன்றுவரை இந்த எரிமலை நாட்டின் 2வது மிக ஆபத்தான பகுதி என்ற நிலையிலேயே உள்ளது.
கடந்த காலங்களிலும் தற்போதும் ஏற்பட்ட இந்த தொடர் வெடிப்புகளால் எரிமலையின் அளவு அதன் ஆரம்ப அளவிலிருந்து கால் பங்காக குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.