

இந்தோனேசியாவில் 'அனக் கிரகடாவ்' எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.
இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுண்டா ஜலசந்தி பகுதியில் 'அனக் கிரகடாவ்' என்ற எரிமலை அமைந்துள்ளது.
நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) முதல் அனக் கிரகடாவ் எரிமலையில் லேசான அதிர்வுகள் பதிவாகி வந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3:53 மணிக்கு எரிமலை வெடித்து சிதறியது.
செயற்கைக்கோள் படங்களின்படி, எரிமலையிலிருந்து 20,000 அடி மற்றும் 50,000 அடி உயரத்திற்கு இரு மாபெரும் சாம்பல் மேகங்கள் எழும்பி, ஜகார்த்தா, லம்பங் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்குப் பரவின.
குடியிருப்பு பகுதிகள் எரிமலையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளதால் உடனடி உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
இருப்பினும், எரிமலையிலிருந்து 3 கி.மீ சுற்றளவுக்குச் செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் 58 சர்வதேசச் சேவைகள் உட்பட மொத்தம் 301 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஜகார்த்தாவின் முக்கிய சர்வதேச விமான நிலையமான 'சுகர்னோ-ஹட்டா' அதிகாலை 5:30 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, ஆம்ஸ்டர்டாம், சியோல், தோஹா மற்றும் கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கான சர்வதேச விமானச் சேவைகளும், பாலி, சுராபயா போன்ற உள்நாட்டுச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
இதனால் ஒரே நாளில் சுமார் 22,800 பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையில் பல பயணிகள் நிலையங்களில் காத்திருந்தனர்.
"ஒவ்வொரு நடவடிக்கையிலும் பயணிகளின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது" என இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
'கிரகடாவ்வின் குழந்தை' என்று அழைக்கப்படும் அனக் கிரகடாவ் எரிமலை, 1883 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய 'கிரகடாவ்' எரிமலை வெடிப்பிற்குப் பிறகு, 1927 ஆம் ஆண்டில் கடலுக்கு அடியில் இருந்து புதிதாக உருவாகத் தொடங்கியது.
2018ஆம் ஆண்டில் இந்த அனக் கிரகடாவ் எரிமலை வெடித்தபோது, அதன் ஒரு பகுதி கடலுக்குள் சரிந்து விழுந்து ஏற்பட்ட நிலச்சரிவால் பயங்கரச் சுனாமி உருவானது. இதில் சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் 430க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அன்றிலிருந்து இன்றுவரை இந்த எரிமலை நாட்டின் 2வது மிக ஆபத்தான பகுதி என்ற நிலையிலேயே உள்ளது.
கடந்த காலங்களிலும் தற்போதும் ஏற்பட்ட இந்த தொடர் வெடிப்புகளால் எரிமலையின் அளவு அதன் ஆரம்ப அளவிலிருந்து கால் பங்காக குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.