

வங்கதேசத்தின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நடந்த மாணவர் புரட்சியால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நடத்திய தேர்தலில் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பதவி ஏற்றார். நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவியில் நீடித்து வந்தார்.
2023-ம் ஆண்டில் அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட அவருக்கு இன்னும் 2 ஆண்டு பதவிக்காலம் உள்ளது. ஆனால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் அவருக்கு இருந்ததாகக் கருதப்படும் தொடர்பு காரணமாக தாாிக் ரஹ்மான் அரசுக்கும், அதிபர் முகமது ஷஹாபுதீனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையே, வரும் டிசம்பரில் ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசம் திரும்ப உள்ளேன் என அறிவித்தார். அவரிடம் அதிபர் முகமது ஷஹாபுதீன் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. இது வங்கதேச புதிய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கடந்த மாதம் 24-ம் தேதி அதிபர் பதவியில் இருந்து முகமது ஷஹாபுதீன் திடீரென ராஜினாமா செய்தார். தற்போது நாடாளுமன்ற சபாநாயகர் ஹபிஸ் உத்தீன் அகமது இடைக்கால அதிபராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், வங்கதேசத்தின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 13-ம் தேதியும், வேட்புமனு பரிசீலனை ஆகஸ்ட் 16-ம் தேதியும் நடைபெறும் என தெரிவித்தது.