

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வங்கதேசம், தற்போது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக மோசமான மின்சார தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் 9 முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார நெருக்கடியைச் சமாளிக்கவும் எரிபொருள் இருப்பை உயர்த்தவும் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச அரசு, இந்தியாவிடம் கூடுதல் டீசல் வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசத்தில் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய தரவுகளின்படி நாட்டின் மின்சாரத் தேவை சுமார் 18,000 மெகாவாட்டாக உள்ள நிலையில், மின் உற்பத்தி வெறும் 13,000 மெகாவாட் அளவிலேயே உள்ளது. இதனால் சுமார் 5,000 மெகாவாட் அளவிற்கு கடுமையான மின் பற்றாக்குறை நிலவுகிறது. தலைநகர் டாக்காவைத் தவிர்த்து, வெளி மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் இதன் தாக்கம் மிக மோசமாக உள்ளது.
ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் வரை தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் வணிகங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயப் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. தீவிர வெப்ப அலை வீசி வரும் சூழலில், இந்த நீண்ட நேர மின்வெட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் நாட்டின் அரசு பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வர்த்தக வளாகங்கள், கடைகள் மற்றும் சந்தைகள் அனைத்தும் இரவு 8 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சார சேமிப்பை உறுதி செய்ய பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முன்னதாகவே விடுமுறை அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளையும் வங்கதேச அரசு மேற்கொண்டு வருகிறது.
மின் பற்றாக்குறைக்கு எரிபொருள் தட்டுப்பாடே முதன்மையான காரணியாக இருப்பதால், இந்தியாவிடம் இருந்து கூடுதல் டீசல் இறக்குமதி செய்ய வங்கதேச அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அசாமின் நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எல்லை தாண்டிய 'இந்தியா-வங்கதேச நட்புறவு குழாய் பாதை' வழியாக டீசல் விநியோகத்தை அதிகரிக்குமாறு வங்கதேசத்தின் மின் மற்றும் எரிசக்தி அமைச்சகம் இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. வங்கதேசத்தில் நிலவும் இந்த கடுமையான எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா கூடுதல் டீசல் வழங்கி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.