அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து பக்ரைன் மீது ஏவுகணை-டிரோன்கள் வீச்சு..!- ஈரான் தாக்குதலால் பரபரப்பு

ஷேக் ஈசா-ஜுபைர்ஆகிய 2 அமெரிக்கத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து பக்ரைன் மீது ஏவுகணை-டிரோன்கள் வீச்சு..!- 
ஈரான் தாக்குதலால் பரபரப்பு
Published on: 

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கியது.

சுமார் 4 மாதங்களுக்கு பிறகு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு இருதரப்பு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதற்கிடையே ஈரானின் கெஷ்ம் தீவு உள்ளிட்ட இடங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பக்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

மீண்டும் தாக்குதல்

இந்தநிலையில் பக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை-டிரோன்கள் வீசி தாக்குதல்கள் நடத்தியதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்து உள்ளது.

அல்-ரிபா மற்றும் அவாலி தளங்களில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளது.

அதேபோல் ஷேக் ஈசா-ஜுபைர்ஆகிய 2 அமெரிக்கத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அமெரிக்க தாக்குதல்- ஈரான் வான்வெளியில் மீண்டும் மீண்டும் நடத்தப்படும் அத்துமீறல்களுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டன என்று ஈரான் தெரிவித்தது.

இதற்கிடையே பக்ரைனில் உள்ள ஒரு தொழிற்சாலையை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியது என்றும் இதனால் அங்கு தீப்பிடித்தது என்றும் பக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

கடும் புகை

தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தாக்குதல் நடந்த தொழிற்சாலை பற்றிய தகவலை பக்ரைன் தெரிவிக்கவில்லை.

ஆனால் அரசு எண்ணெய் நிறுவனமான பாப்கோவால் இயக்கப்படும் ஒரு சுத்திகரிப்பு நிலையம் உள்பட பல தொழிற்சாலைகள் அமைந்துள்ள சிட்ரா தீவின் மீது கடும் புகை எழும்பியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஈரானின் தாக்குதலால் பக்ரைனில் பெரும் பரபரப்பு நிலவியது. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

சிறிது நேரத்திற்கு பிறகு அந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இதற்கிடையே ஈரான் ஏவிய ஏவுகணை-டிரோன்களை நடுவானில் இடைமறித்ததாக பக்ரைன் தெரிவித்தது.

X