

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் நபர் ஒருவர் மெட்டல் டிடெக்டர் கருவியைக் கொண்டு சாதாரணத் தேடலில் ஈடுபட்டிருந்த போது, சுமார் 1.2 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான தங்கக் கட்டி ஒன்றை மண்ணில் இருந்து தோண்டி எடுத்துள்ளார்.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 1.25 கோடி முதல் ரூ. 1.60 கோடி வரை இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான டிபூபுரா என்ற இடத்தில் இந்த அசாத்திய அதிர்ஷ்டம் நிகழ்ந்துள்ளது.
அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்த நபர், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள மவுண்ட் ஸ்டூவர்ட் என்ற இடத்தில் தங்கம் தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். பல நாட்களாகத் தோண்டிய போதும் அவருக்குப் பழைய ஆணிகள், குதிரை லாடங்கள் மற்றும் பழைய துப்பாக்கி குண்டுகள் போன்ற பயனற்ற இரும்புப் பொருட்களே கிடைத்து வந்தன.
இருப்பினும், முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து தேடியபோது, அவரது மெட்டல் டிடெக்டர் கருவி மீண்டும் ஒரு சிக்னலைக் காட்டியுள்ளது. ஆரம்பத்தில் சிறிய சிக்னலாக இருந்ததால், வழக்கம்போல ஏதோ குப்பை தான் இருக்கப்போகிறது என்று நினைத்து அவர் மண்ணைத் தோண்டியுள்ளார்.
மண்ணைத் தோண்டத் தொடங்கியதும், குழியின் நடுவே லேசான 'மஞ்சள் நிறப் புள்ளி' ஒன்று மின்னுவதைக் கவனித்துள்ளார். அதைத் தொடர்ந்து சுற்றியிருந்த மண்ணை மெதுவாக அகற்றிய போது, சுமார் 100 மில்லிமீட்டர் ஆழத்தில் கருவி பயங்கர சத்தமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
முழுமையாகத் தோண்டிப் பார்த்தபோது, குவார்ட்ஸ் பாறையுடன் கலந்த ஒரு பெரிய உருளைக்கிழங்கு அளவிலான தூய தங்கக் கட்டி வெளியே வந்தது. இதனைத் தோண்டி எடுக்கும் போது அவரது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அடக்க முடியாமல் அவர் திகைத்துப் போனார்.
இந்தத் தங்கக் கட்டியின் மொத்த எடை 1.2 கிலோ ஆகும். இதில் 940 கிராம் அளவிற்குப் புத்தம் தூய தங்கம் நிறைந்துள்ளது.
இந்தத் தங்கக் கட்டி உருளைக்கிழங்கு வடிவில் இருந்ததால், இதற்கு "டிபூபுரா ஸ்பட்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
எடையின் அடிப்படையில் மட்டும் இதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.25 கோடி ஆகும். ஆனால், இதனை ஏதேனும் ஒரு தனியார் சேகரிப்பாளரிடம் விற்றால்சுமார் ரூ.1.65 கோடி வரை விலை போக வாய்ப்புள்ளதாகத் தங்கம் மதிப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.