பெரும்பாலான குழந்தைகளுக்கு சிலந்தி என்றாலே பயமும் அலறலும் தான் முதலில் வரும். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மர்பி விட்டோவ்சன் செய்த ஒரு காரியம், இன்று அவனை உலக அறிவியல் வரலாற்றில் இடம்பிடிக்கச் செய்துள்ளது.
அவன் கண்டுபிடித்த ஒரு வகை சிறிய சிலந்தி, அதுவரை உலகிற்குத் தெரியாத ஒரு புதிய இனம் என்பதை விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
கடந்த 2020-ஆம் ஆண்டு, மர்பிக்கு 10 வயது இருக்கும் போது, அவனது பெற்றோர் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கடற்கரையில் உள்ள 'டீல் தீவில்' பணிபுரிந்து வந்தனர்.
அப்போது அந்தத் தனித்தீவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், வித்தியாசமான ஒரு சிறிய சிலந்தியைப் பார்த்துள்ளான். அதைக்கண்டு பயந்து ஓடாமல், அது என்ன வகையான சிலந்தி என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான்.
தன் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள, லான்செஸ்டனில் உள்ள 'ராணி விக்டோரியா அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தை' மர்பி தொடர்புகொண்டான். அங்குள்ள பிரபல சிலந்தி ஆராய்ச்சியாளர் ஜான் டக்ளஸ் அந்த சிலந்தியை ஆய்வு செய்தார். ஆனால், அவராலும் அதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதில் ஏதோ விசேஷம் இருக்கிறது என்று உணர்ந்த அவர், மேல் ஆய்விற்காக அதை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிலந்தி வகைப்பாட்டியல் நிபுணர் டாக்டர் வோல்கர் ஃபிராமெனாவிடம் அனுப்பினார்.
விஞ்ஞானிகள் அந்த சிலந்தியை அதிநவீன நுண்ணோக்கி மூலம் தீவிரமாக ஆய்வு செய்தனர். சாதாரண கண்களுக்கு அது மற்ற ஓநாய் சிலந்திகளைப் போலவே தெரிந்தாலும், அதன் உடலமைப்பிலும், குறிப்பாக அதன் இனப்பெருக்க இருப்புகளிலும் முற்றிலும் மாறுபட்ட தனித்துவமான அம்சங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
அதுவரை மனிதகுலம் கண்டறியாத ஒரு புதிய "ஓநாய் சிலந்தி" இனம் அது என்பது உறுதி செய்யப்பட்டது.
மர்பியின் இந்த அசாத்திய ஆர்வத்தைப் பாராட்டும் விதமாக, அந்தப் புதிய சிலந்தி இனத்திற்கு அந்த சிறுவன் பெயரைச் சேர்த்து 'ஆர்டோரியோப்சிஸ் மர்பி' என்று விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள், அருங்காட்சியக ஊழியர்கள் மற்றும் சிறுவனின் குடும்பத்தினர் முன்னிலையில் மர்பிக்கு ஒரு பெரிய பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில், சிலந்தியின் அறிவியல் பெயர் பொறிக்கப்பட்ட கேக் வெட்டி சிறுவனின் சாதனையை கொண்டாடப்பட்டது.
சிலந்தி என்றாலே பலருக்கும் பயம் இருக்கும். ஆனால், இந்த 'ஆர்டோரியோப்சிஸ் மர்பி' சிலந்திகள் மனிதர்களுக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று ஆராய்ச்சியாளர் ஜான் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
இது வெறும் 5 மில்லிமீட்டர் அளவு மட்டுமே கொண்டது. இது மனிதர்களைக் கடித்தாலும் விஷத்தன்மை அற்றது. இதன் பற்கள் மனித தோலைத் துளைத்தாலும், நமக்குப் பெரிய அளவில் வலியோ அல்லது எந்த உணர்வோ கூடத் தெரியாது.
அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பவை எப்போதுமே அதிநவீன ஆய்வகங்களில் மட்டுமே பிறப்பதில்லை; சாதாரண மனிதர்களின், குறிப்பாகக் குழந்தைகளின் தேடல் மற்றும் ஆர்வத்திலிருந்தும் பிறக்கும் என்பதை மர்பியின் இந்தச் சாதனை நிரூபித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் காடுகளில் இன்னும் கண்டறியப்படாத கோடிக்கணக்கான உயிரினங்கள் உள்ளன என்பதற்கும் இது ஒரு சிறந்த சான்றாகும்.