

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு காட்டு பகுதியில் சுற்றுலா சென்ற மூளை வளர்ச்சி குன்றிய 17 வயது இளைஞர் வழி தவறியதை தொடர்ந்து, ஆறு நாட்களுக்கு பிறகு மீட்பு குழுவினர் இளைஞரை பத்திரமாக மீட்டனர்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிக்கு தனது நண்பர்களுடன், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட (மூளை வளர்ச்சி குன்றிய) 17 வயது இளைஞர் வில்லியம் சென்றுள்ளார்.
மெல்போர்ன் நகரத்தில் இருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வால்ஹல்லா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு முகாமில் இளைஞர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து கடந்த நவம்பர் 6 அன்று முகாமில் இருந்து, இரவு நேரத்தில் வெளியே தனியாக சென்ற இளைஞர், தனது கைபேசி, உணவு மற்றும் டிரெக்கிங் சம்பந்தப்பட்ட பொருட்களை முகாமில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது மீண்டும் தனது முகாமிற்கு திரும்ப முயற்சி செய்தபோது, தான் வந்த பாதையை மறந்து, இளைஞர் வழி தவறியுள்ளார்.
இதையடுத்து முகாமில் இருந்த குழுக்கள் அவரை பல இடங்களில் தேடியும் இளைஞரை கண்டுபிடிக்காமல் போனது.
இதைத்தொடர்ந்து சுமார் 80க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் வழி தவறிய இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இளைஞரை மீட்பதற்காக, மோப்ப நாய் மற்றும் ஹெலிகாப்டர் மீட்பு குழுவினர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் வழிதவறிய இளைஞர் உயிர் பிழைப்பதற்காக அருகிலிருந்த ஓடையில் நீர் அருந்தியும், தான் வைத்திருந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டும் வந்துள்ளார்.
இரவு நேரத்தில் குளிர் அதிகமாக இருந்ததால், இளைஞர் ஒரு சிறிய காட்டன் துண்டை சுருட்டி தனது உடலை மூடியுள்ளார்.
இதையடுத்து நேற்று காலை, புதர் காட்டில் பாறையின் மீது படுத்திருந்த இளைஞரை ஹெலிகாப்டர் மீட்பு குழுவினர் கண்டு பிடித்தனர். அப்போது இளைஞர் மீட்புக்குழுவினரை பார்த்து தனது கையை அசைத்துள்ளார்.
இந்த மீட்பு நடவடிக்கை குறித்து இளைஞரின் தாயார் எலிசபெத் பார்க்லி கூறுகையில், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு வழி தவறிய தனது மகனை ஒரு வாரமாக தேடி, மீட்டு கொடுத்த மீட்பு குழு அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.