ஓபன்ஏஐ தரவு மீறல் எதிரொலி: ஆஸ்திரேலியாவில் புதிய AI பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பு

இந்தப் பாதுகாப்பு மீறல் சம்பவம் ஜூன் மாதத்தில் நடந்திருந்தாலும், செப்டம்பர் மாதம்தான் ஆஸ்திரேலிய அரசுக்கு ஓபன்ஏஐ தாமதமாகத் தகவல் அளித்துள்ளது.
OpenAI
Published on: 
Summary

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைக் கண்காணிக்கப் பிரத்யேக பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ அரசின் இணையதளத்தில் அனுமதியின்றி நுழைந்து தரவுகளைப் பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைக் கண்காணிக்கப் பிரத்யேக பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஏஐ ஏஜென்ட் ஒன்று ஆஸ்திரேலிய சுகாதாரத் துறைக்குச் சொந்தமான மருத்துவ புள்ளிவிவர அறிக்கைப் போர்ட்டலில் அனுமதியின்றி நுழைந்து தகவல் சேகரித்துள்ளது. இந்தத் தரவுகள் பின்னர் பொதுவெளியில் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொழில்நுட்ப நிறுவனங்களின் இத்தகைய தன்னிச்சையான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிதாக உருவாக்கப்படவுள்ள இந்த ஒழுங்குமுறை ஆணையமானது, ஆஸ்திரேலியாவில் இயங்க விரும்பும் அனைத்து முன்னணி ஏஐ நிறுவனங்களுக்கும் கடுமையான சட்டப்பூர்வ தரங்களை நிர்ணயிக்கவுள்ளது. மாடல்களின் உருவாக்கம் மற்றும் பயன்பாடு ஆகிய அனைத்து கட்டங்களிலும் நிறுவனங்கள் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், ஏஐ தொழில்நுட்பங்களில் எழும் முரண்பட்ட நடவடிக்கைகள் அல்லது பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்து அரசாங்கத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது.

ஓபன்ஏஐ நிறுவனம் மன்னிப்பு

இந்தப் பாதுகாப்பு மீறல் சம்பவம் ஜூன் மாதத்தில் நடந்திருந்தாலும், செப்டம்பர் மாதம்தான் ஆஸ்திரேலிய அரசுக்கு ஓபன்ஏஐ தாமதமாகத் தகவல் அளித்துள்ளது. இதற்குப் பிரதமர் அந்தனி அல்பானீஸ் ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனிடம் தனது நேரடியான அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். தாமதமான எதிர்வினைக்கும் தரவு மீறலுக்கும் ஓபன்ஏஐ நிறுவனம் பின்னர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நேராமல் இருக்கத் தங்களின் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தி வருவதாகவும் உறுதியளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட அரசு விசாரணையின் அனைத்து பரிந்துரைகளையும் ஆஸ்திரேலிய அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டு வரும் அதிவேக மாற்றங்களுக்கு ஏற்ப குற்றவியல் சட்டங்களில் உரிய திருத்தங்களைக் கொண்டுவரவும் அரசு ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே ஆன்லைன் பாதுகாப்பிற்காகப் பிரத்யேக ஆணையர்களை நியமித்து உலகிற்கு முன்னோடியாகத் திகழும் ஆஸ்திரேலியா, தற்போது ஏஐ பாதுகாப்பு விவகாரத்திலும் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரும் முதல் நாடாக உருவெடுத்துள்ளது.

X