

சவுதி அரேபியாவுக்கும், ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதில் சவுதி அரேபிய நகரங்கள் மீது ஏவுகணை-டிரோன்களை ஹவுதிகள் வீசி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 15 பேர் பலியானார்கள்.
இந்தநிலையில் சீன பாகங்களை கொண்டு புதிய, மேம்பட்ட நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை அமைப்பை உருவாக்க ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முயற்சிப்பதாக இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட கான்ப்ளிக்ட் ஆர்மென்ட் ரிசர்ச் அமைப்பு தெரிவித்து உள்ளது.
சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேலில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறனை மேம்படுத்தக்கூடிய ஒரு மேம்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்பை உருவாக்க, சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகங்களை ஹவுதிகள் தேடி வருவதாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரானின் கைபர் ஷேகன் வகை துல்லியத் தாக்குதல் ஏவுகணையைத் தயாரிப்பதற்குத் தேவையான முக்கிய உதிரிபாகங்களைச் சீன நிறுவனங்களிடமிருந்து பெற ஹூதிகள் முயற்சித்து உள்ளனர் என்று தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் மூத்த ஆய்வாளர் பேபியன் ஹின்ஸ் கூறுகையில்,"
ஹூதிகளின் உள்நாட்டு உற்பத்தி நாம் முன்பு கருதியதை விட அதி கமாக உள்ளது. இத்தகைய உதிரிபாகங்கள் மிகவும் பிரத்யேகமானவை. இவை பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கு உதவும் பொருட்கள் அல்ல" என்றார்.
இந்தநிலையில் சவுதி அரேபியாவின் தஹ்ரானில் உள்ள அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாக ஹவுதிகள் அறிவித்து உள்ளனர்.