புதிய தாக்குதலால் அமெரிக்கா வருத்தப்படும்: கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள்- ஈரான் எச்சரிக்கை

ஈரானில் நடைபெற்ற திருமண விழாவில் அமெரிக்கா வீசிய ஏவுகணை தாக்குதலில் செய்தி 50 பேர் படுகாயமடைந்தனர்.
US-Iran missile strikes
Published on

ஈரானில் உள்ள சிரிக் நகரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், அமெரிக்கா ஏவுகணைகளை வீசி இரவு முழுவதும் தாக்கியதில், ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் சுமார் 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் மீது இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் (IRGC) சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மொஜ்தபா கமேனி அழைப்பு

கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வருமாறு, ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து மொஜ்தபா கமேனி வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு, ஈரானில் உள்ள லராக் தீவில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் பல ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதாக இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை தெரிவித்தது.

மேலும் இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்றும், அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடங்களை ஈரான் வழங்கவுள்ளதாகவும் மொஜத்பா கமேனி தெரிவித்திருந்தார்.

ஈரான் பதிலடி

இதையடுத்து ஜோர்டானில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களான கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ரக் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

ஈரானிலிருந்து ஏவப்பட்ட 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்டான் ராணுவம் தெரிவித்தது. மேலும் மூன்று ஏவுகணைகள் தொலைதூரப் பகுதிகளில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

குவைத் மற்றும் பஹ்ரைனிலும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் பதிவாகின. இதையடுத்து பஹ்ரைனில் உள்ள குடிமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையில் அமெரிக்கா தங்கள் குற்றங்களுக்காக வருந்தும் வரை, அவர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளரான கர்னல் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி தெரிவித்தார்.

அமெரிக்கா தாக்குதல்

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, ஈரான் நாட்டின் தெற்கில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியிலும், வளைகுடாவில் உள்ள ஒரு தீவிலும் அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது.

மேலும் தெற்கு கெர்மான் மாகாணத்தில் உள்ள ஒரு விமான நிலையத்தின் மீதும், ஈரானின் சபஹர் மற்றும் கொனார்க் மாவட்ட பகுதிகளில் நான்கு ஏவுகணைகளை அமெரிக்கா வீசியது.

இதைத்தொடர்ந்து ஈரானின் சிரிக் நகரின் குஹெஸ்டாக் பகுதியில் நடந்த ஒரு திருமணத்தில் அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்கியதாகவும், இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதலில் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டதாக வந்த செய்திகளை அமெரிக்க ராணுவம் மறுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், அமெரிக்க ராணுவம் ஒருபோதும் பொதுமக்களைக் குறிவைப்பதில்லை என்று கூறினார்.

ஈரான் மீதான தாக்குதல் குறித்து சென்ட்காம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், அப்பகுதியில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் மீதும், மேலும் ஜோர்டான் மீது சமீபத்தில் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஈரான் எச்சரிக்கை

இந்த நிலையில் ஈரானின் (ஐ.ஆர்.ஜி.சி) செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹேபி வெளியிட்ட X பதிவில், வாஷிங்டன் தனது புதிய தாக்குதல்களுக்காக வருந்தும் என்றும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது என்றும் எச்சரித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com