அக்.24 வரை ஜெட்டா, ரியாத்துக்கான விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்தியது ஏர் இந்தியா

விமானச் சேவை ரத்து செய்யப்பட்ட பயணிகள், பயணம் செய்ய விரும்பவில்லை எனில், கட்டணத்தைத் முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் (refund) தேர்வு செய்து கொள்ளலாம்.
 Air India
Published on: 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக ஏர் இந்தியா (Air India) மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) ஆகிய நிறுவனங்கள் ஜெட்டா, ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 24, 2026 வரை விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் ரியாத் விமான நிலையத்தைக் குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவுக்கான விமானச் சேவைகளை ரத்து செய்வதை அக்டோபர் 24 வரை நீட்டிப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

விமானச் சேவை தற்காலிக நிறுத்தம்

தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா (Air India) மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) ஆகிய நிறுவனங்கள், ஜெட்டா, ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய இடங்களுக்கான விமானச் சேவைகளை 24 அக்டோபர் 2026 வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.

15 அக்டோபர் 2026 அன்று அல்லது அதற்கு முன்பாக முன்பதிவு செய்யப்பட்டு, 9 அக்டோபர் முதல் 25 அக்டோபர் 2026 வரையிலான தேதிகளில் பயணம் செய்யவிருந்த பயணிகள், தங்கள் விமான நிறுவனத்தின் மூலம் ஒருமுறை கட்டணமின்றி பயணத் தேதியை மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. (10 நவம்பர் 2026 வரை).

கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்

ஏர் இந்தியா பயணிகள் துபாய் அல்லது தோஹா ஆகிய இடங்களுக்குத் தங்கள் பயணத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் அபுதாபி, அல் ஐன், பஹ்ரைன், தோஹா, துபாய், குவைத், மஸ்கட், ராஸ் அல் கைமா, சலாலா அல்லது ஷார்ஜா ஆகிய இடங்களுக்குத் தங்கள் பயணத்தை மாற்றிக்கொள்ளலாம்.

விமானச் சேவை ரத்து செய்யப்பட்ட பயணிகள், பயணம் செய்ய விரும்பவில்லை எனில், கட்டணத்தைத் முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் (refund) தேர்வு செய்து கொள்ளலாம் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணத் தேதியை மாற்றுவது அல்லது கட்டணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான உதவிகளுக்கு, எங்கள் தொடர்பு மையங்களை (Air India தொடர்பு மையம்: +91 1169329333 / +91 1169329999; Air India Express தொடர்பு மையம்: +91 124 6935600) அணுகலாம் என்று தெரிவித்துள்ளது.

நாங்கள் தொடர்ந்து சூழலைக் கண்காணித்து வருகிறோம், பொருத்தமான பயண விருப்பங்கள் மூலம் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர உதவுவதுமே எங்கள் முதன்மையான நோக்கமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com