எழுத்து உலகின் சக்கரவர்த்தி- புகழ்பெற்ற பிரிட்டிஷ் நாவலாசிரியர் ஜெஃப்ரி ஆர்ச்சர் காலமானார்

1940-ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த ஜெஃப்ரி ஆர்ச்சர், கன்சர்வேடிவ் கட்சி மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
Jeffrey Archer
Published on: 
Summary

உலகளவில் 30 கோடிக்கும் அதிகமான புத்தகங்களை விற்பனை செய்து, திரில்லர் மற்றும் நாவல் உலகின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளரும், முன்னாள் அரசியல்வாதியுமான ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது 86வது வயதில் காலமானார்.

உலகளவில் 30 கோடிக்கும் அதிகமான புத்தகங்களை விற்பனை செய்து, திரில்லர் மற்றும் நாவல் உலகின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளரும், முன்னாள் அரசியல்வாதியுமான ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது 86வது வயதில் காலமானார். அவரது மறைவு செய்தியை வெளியீட்டு நிறுவனமான ‘ஹார்பர்காலின்ஸ்’ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. புதிய புத்தகத்தை எழுதும் பணிகளுக்கு இடையிலான இடைவேளையின் போது, அவர் தனது வீட்டில் எதிர்பாராதவிதமாகவும் அமைதியாக உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெஃப்ரி ஆர்ச்சரின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள ஹார்பர்காலின்ஸ் நிறுவனத்தின் பிரிட்டன் தலைமைச் செயல் அதிகாரியும், அவரது பதிப்பாசிரியருமான கேட் எல்டன், "தலைமுறை தலைமுறையாக வாசகர்களுக்கு அளப்பரிய மகிழ்ச்சியை வழங்கிய ஒரு சிறந்த எழுத்தாளரையும், எங்கள் உண்மையான நண்பரையும் இழந்து நாங்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய 'ஆடம் அண்ட் ஈவ்' என்ற இறுதி புத்தகம் வெளியாவதற்கு சரியாக ஒரு நாளுக்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்துள்ளது வாசகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1940-ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த ஜெஃப்ரி ஆர்ச்சர், கன்சர்வேடிவ் கட்சி மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1969-ஆம் ஆண்டு தனது 29வது வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் களத்தில் முத்திரை பதித்தார். பின்னர், மார்கரெட் ஆட்ச்சர் பிரதமராக இருந்த காலத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.

இருப்பினும், அவரது வாழ்க்கை பல திருப்பங்களும் சர்ச்சைகளும் நிறைந்ததாக இருந்தது. 2001-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்த வழக்கில் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்தையும் அனுபவித்தார். இந்தச் சிறை அனுபவங்களே பின்னாள்களில் அவர் 'ஏ பிரிசன் டைரி' என்ற புத்தகத்தை எழுத அடிப்படையாக அமைந்தது.

எழுத்து உலகின் சக்கரவர்த்தி

அரசியல் பின்னடைவுகளுக்குப் பிறகு, தனது அசாத்திய எழுத்துத் திறமையால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைச் சம்பாதித்தார். 1976-இல் வெளியான 'நாட் ஏ பென்னி மோர், நாட் ஏ பென்னி லெஸ்' என்ற நாவல் மூலம் எழுத்தாளராக அறிமுகமான இவர், 1979-இல் எழுதிய 'கேன் அண்ட் ஏபெல்' நாவல் மூலம் உலக அளவில் பெரும் புகழ்பெற்றார். இந்நாவல் மட்டும் உலகம் முழுவதும் 3 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது.

புனைகதை, சிறுகதை மற்றும் புனைகதை அல்லாத பிரிவுகள் என மூன்றிலும் சண்டே டைம்ஸ் விற்பனைப் பட்டியலில் முதலிடம் பிடித்த ஒரே எழுத்தாளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 119 நாடுகளுக்கும் இவரது புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுப் படிக்கப்பட்டுள்ளன. மறைந்த ஜெஃப்ரி ஆர்ச்சருக்கு மேரி ஆர்ச்சர் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். உலகளவில் உள்ள அவரது லட்சக்கணக்கான வாசகர்களும் இலக்கிய உலகினரும் அவருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com