செங்குத்தான மலைப்பாதையில் அசால்ட்டாக ஏறிய 9 மாத குழந்தை - நெட்டிசன்கள் மத்தியில் வெடித்த விவாதம்!

6-ம் மாதத்தில் தவழ்ந்த வென்வென், 8-ம் மாதத்தில் படிகள் ஏறினான் என தந்தை ஹுவாங் பெருமிதம்.
Mountain Climbing Baby
Published on: 
Summary

சீனாவில் வெறும் ஒன்பது மாதமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று, செங்குத்தான மலைப் படிக்கட்டுகளில் தவழ்ந்து ஏறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் குழந்தையின் பாதுகாப்பு குறித்த கவலையையும், பெற்றோரின் வளர்ப்பு முறை குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

ஆச்சரியப்படுத்திய 9 மாதக் குழந்தை ‘வென்வென்’

மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பிரதேச சுற்றுலாத் தளத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான சில நாட்களிலேயே இந்த வீடியோவிற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துகளும் குவிந்துள்ளன.

அந்த வீடியோவில், 'வென்வென்' என்ற அந்த ஆண் குழந்தை, முழங்கால்களில் பாதுகாப்பு கவசங்களை அணிந்துகொண்டு, மிகுந்த உற்சாகத்துடன் படிக்கட்டுகளில் தவழ்ந்து ஏறுவதைக் காண முடிகிறது. அவரது தாய் மிக அருகில் நின்று அவனைக் கண்காணித்து வருகிறார்.

இணையவாசிகளின் இருவேறு கருத்துகள்

இந்த வீடியோவைப் பார்த்த சிலர், "இவ்வளவு சிறிய குழந்தையை இப்படியா மலையேற வைப்பது? செடியை வேகமாக வளர்க்க வேரோடு பிடுங்கி நடுவது போன்ற ஆபத்தான செயல் இது" என்று தங்களது அதிர்ச்சியைப் பதிவு செய்துள்ளனர்.

இருப்பினும், பெரும்பாலான இணையவாசிகள் இந்த பெற்றோருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளனர். "உண்மையான அர்த்தத்தில் மலையை 'ஏறியது' இந்த குழந்தை மட்டும்தான் (மற்றவர்கள் நடந்து சென்றனர்)" என்றும், "குழந்தை அழுக்காகிவிடும் என்று பயந்து வளர்க்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், இப்படி இயற்கையோடு வளர்ப்பதால் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்" என்றும் பாராட்டியுள்ளனர்.

மேலும் சிலர், "வழியில் கூர்மையான கற்கள் இருக்கலாம் என்பதால், குழந்தைக்குக் கைகளிலும் கிளவுஸ் அணிவிக்கலாம்" எனப் பயனுள்ள ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.

6 மாதத்திலேயே தவழப் பழகிய சுட்டி!

இதுகுறித்து குழந்தையின் தந்தை 'ஹுவாங்' கூறும்போது: "வென்வென் தனது 6-வது மாதத்திலேயே தவழத் தொடங்கிவிட்டான். 8-வது மாதத்தில் எங்கள் வீட்டுப் படிக்கட்டுகளில் அழகாக ஏறக் கற்றுக்கொண்டான்.

எங்கள் குடியிருப்புப் பகுதியில் அவன் படிக்கட்டுகளில் ஏறுவதைப் பார்த்த பின்புதான், அவனால் மலையேற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்தது. இது அவனது முதல் மலையேற்றப் பயணம்" என்றார்.

மேலும், "நானும் என் மனைவியும் இயற்கையை விரும்பும் மலையேற்ற ஆர்வலர்கள். எங்கள் மகனுக்கும் அந்த ஆர்வம் பிறவியிலேயே வந்துவிட்டது போல் தெரிகிறது.

வீட்டிற்குள் நீண்ட நேரம் இருந்தால் அவன் அமைதியற்றவனாக மாறிவிடுகிறான். அவனுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அழைத்து வரவில்லை, அவனது அதீத ஆற்றலை நல்ல முறையில் செலவழிக்கவே இங்கு கூட்டி வந்தோம்" என்று விளக்கமளித்துள்ளார்.

பாதுகாப்பான மலையேற்றம்

மலையேற்றத்தின் போது சுற்றியிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தபோதும், வென்வென் எதையும் பொருட்படுத்தாமல் வழியில் இருந்த பூக்கள் மற்றும் செடிகளை ரசித்தபடி இலக்கை நோக்கி முன்னேறியுள்ளான்.

இந்த மலையேற்றத்திற்குப் பிறகு அவனது மனநிலை மிகவும் மகிழ்ச்சியாக மாறியதுடன், சீக்கிரமாகவே தூங்கிவிட்டான் என்றும் தந்தை ஹுவாங் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

பெற்றோரின் அடுத்தகட்ட திட்டம்

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அவர்களின் ஆர்வத்திற்குத் தடை போடாமல் வளர்க்க வேண்டும் என்பதே இவர்களின் கருத்தாகும்.

தங்களைப் பார்த்து தங்கள் குழந்தைகளையும் இப்படி வளர்க்க விரும்பும் பெற்றோருக்கு அட்வைஸ் செய்துள்ள தம்பதியினர், "மலையேற்றத்தின் போது குழந்தையைச் சுற்றி குறைந்தது மூன்று பெரியவர்களாவது பாதுகாப்பிற்கு இருக்க வேண்டும்.

செங்குத்தான மலைகளைத் தவிர்க்க வேண்டும்; பாதுகாப்பு உபகரணங்கள் மிக முக்கியம்" எனக் கூறியுள்ளனர். மேலும், அடுத்தகட்டமாக இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வென்வெனை மலையேற்றத்திற்கு அழைத்துச் செல்லவும், விரைவில் அவனுடன் முகாம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com