

மறைந்த மகனின் நினைவாக குழந்தைக்கு 'ஜார்ஜியா' எனப் பெயரிட்டு அன்பைப் பொழிந்து வருகின்றனர்.
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸைச் சேர்ந்த 54 வயதான கிறிஸ்டினா ரப்தி-ஜெலேபி மற்றும் அவரது 60 வயது கணவர் கான்ஸ்டான்டினோஸ் தம்பதியினர், மருத்துவ வரலாற்றில் வியப்பூட்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர். சுமார் 22 ஆண்டுகளாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட சொந்தக் கருவைச் செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி, ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர்.
இத்தம்பதியின் 21 வயது ஒரே மகன் ஜார்ஜஸ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட சோகமான சாலை விபத்தில் உயிரிழந்தார். தாங்க முடியாத துயரத்தில் மூழ்கிய தம்பதியினர், வாழ்க்கைக்கு மீண்டும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுக்க முடிவு செய்தனர். கடந்த 2004-ஆம் ஆண்டில் (சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு) தங்களது சொந்தக் கருமுட்டை மற்றும் உயிரணுவைக் கொண்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு உறைநிலையில் பத்திரப்படுத்தப்பட்டிருந்த கருவை, மீண்டும் கிறிஸ்டினாவின் கருப்பையில் செலுத்த மருத்துவர்கள் தீர்மானித்தனர். சுவாரஸ்யமாக, விபத்தில் மறைந்த மகன் ஜார்ஜஸும் இதே செயற்கை கருத்தரித்தல் முறையில்தான் பிறந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீஸ் நாட்டின் சட்டப்படி, பெண்கள் 54 வயது வரை மட்டுமே செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையை மேற்கொள்ள அனுமதி உண்டு. 54 வயதை நெருங்கிக் கொண்டிருந்த கிறிஸ்டினாவுக்கு இச்சிகிச்சையை முடித்து அரசின் அனுமதி பெற வெறும் 2½ மாதங்கள் மட்டுமே அவகாசம் இருந்தது. மருத்துவர் கோஸ்டாஸ் பாண்டோஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சியால், கடந்த ஆண்டு டிசம்பரில் உறைநிலை கரு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு, கிறிஸ்டினா கர்ப்பமடைந்தார்.
ஏதென்ஸில் உள்ள தனியார் மகப்பேறு மருத்துவமனையில் கிறிஸ்டினாவுக்கு 3.49 கிலோ எடையில் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. மறைந்த தங்கள் மகனின் நினைவைப் போற்றும் வகையில் அக்குழந்தைக்கு 'ஜார்ஜியா' எனப் பெயரிட்டுள்ளனர். இப்பிறப்பு குறித்துப் பேசிய கிறிஸ்டினா, "எங்கள் வாழ்க்கைக்கு இரண்டாவது வாய்ப்பளிக்கவும், வீட்டில் மீண்டும் மகிழ்ச்சியை மீட்கவுமே இந்த முடிவை எடுத்தோம்.
எங்கள் முதல் மகனைப் போலவே இவளும் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக வளர வேண்டும் என்பதே என் ஆசை" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். கணவர் கான்ஸ்டான்டினோஸ் கூறுகையில், "எங்களை இருண்ட நிலையிலிருந்து வெளியே கொண்டுவந்து மருத்துவர்கள் மீண்டும் வாழ்வதற்கான நம்பிக்கையைக் கொடுத்துள்ளனர்" என்றார்.
இச்சம்பவம் கிரீஸ் நாட்டின் மகப்பேறு சட்ட விதிகளில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டினுடைய பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், IVF சிகிச்சைக்கான பெண்களின் வயது வரம்பை தளர்த்த வேண்டும் என மருத்துவர் கோஸ்டாஸ் பாண்டோஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.