ஹவுதி தாக்குதலால் செங்கடலில் போர் பதற்றம்: சவூதியின் 1,200 கி.மீ எண்ணெய் குழாய் இணைப்பு மூடல்!

இதனால் நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் பேரல் எண்ணெய் சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
East-West Pipeline
Published on
Summary

சவூதி அரேபியாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றம் மற்றும் தாக்குதல்கள் காரணமாக, சவூதி அரேபியா தனது மிக முக்கியமான கிழக்கிலிருந்து மேற்காகச் செல்லும் கச்சா எண்ணெய் குழாய் இணைப்பை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடியுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் மீண்டும் உயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம்

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களுக்கு இடையே, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் உள்ள முக்கிய துறைமுகங்கள் மற்றும் மூலோபாய தீவுகளைக் கைப்பற்றி வருகின்றனர். குறிப்பாக பாப் எல்-மண்டேப் ஜலசந்திப் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், செங்கடல் வழியாக எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் போக்குவரத்து பாதை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் எழுந்த தடைகளுக்கு மாற்றாக சவூதி அரேபியா பயன்படுத்தி வந்த 1,200 கி.மீ நீளமுள்ள கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளானதை தொடர்ந்து, அதன் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் பேரல் எண்ணெய் சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டு, சர்வதேச கச்சா எண்ணெய் விலையான பிரென்ட் பேரல் ஒன்றுக்கு 104 டாலரைக் கடந்து வர்த்தகமாகி வருகிறது.

சவூதி அரேபியாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தற்போதைய கப்பல் போக்குவரத்து முடக்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியப் பொருளாதாரம் பல வழிகளில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இறக்குமதி செலவு அதிகரிப்பு

எண்ணெய் விலையேற்றத்தால் இந்தியாவின் இறக்குமதி செலவு கணிசமாக அதிகரித்து, அந்நிய செலாவணி கையிருப்புக்கு அழுத்தம் தரும். கச்சா எண்ணெய் விலை உயரும்போது, நாட்டில் எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. வெளிநாட்டு வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையக்கூடும்.

உற்பத்தி மற்றும் போக்குவரத்து சார்ந்த துறைகளில் இயங்கும் நிறுவனங்களின் தயாரிப்பு செலவு அவற்றின் லாப வரம்பு குறைய வாய்ப்புள்ளது. உலகளாவிய வர்த்தக பாதைகளில் ஏற்பட்டுள்ள இந்த முடக்கம் விரைவில் சீரமைக்கப்படாவிட்டால், வரும் வாரங்களில் இந்திய வர்த்தக சந்தையிலும் சர்வதேச அளவிலும் கடுமையான பொருளாதாரப் பின்விளைவுகள் ஏற்படும் என சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com