

2028 அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வலுவான முகங்களாக வான்ஸ் மற்றும் ரூபியோ ஆகியோர் பார்க்கப்படுகின்றனர். இருவரும் இன்னும் அதிபர் போட்டியில் இறங்குவது குறித்து உறுதியான முடிவை அறிவிக்காவிட்டாலும், டிரம்ப் அவர்களைத் தொடர்ந்து கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.
2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் சாத்தியமான வேட்பாளர்களாகத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோரை அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறார். தனது அதிபர் பதவிக் காலத்தின் இறுதி இரண்டு ஆண்டுகளை நெருங்கி வரும் நிலையில், தமக்குப் பிந்தைய தலைமைக்கான போட்டியாளர்களை பொதுவெளியிலும் தனிப்பட்ட சந்திப்புகளிலும் டிரம்ப் கவனத்திற்குக் கொண்டு வருவது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2028 அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வலுவான முகங்களாக வான்ஸ் மற்றும் ரூபியோ ஆகியோர் பார்க்கப்படுகின்றனர். இருவரும் இன்னும் அதிபர் போட்டியில் இறங்குவது குறித்து உறுதியான முடிவை அறிவிக்காவிட்டாலும், டிரம்ப் அவர்களைத் தொடர்ந்து கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.
பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட உரையாடல்களின் போது, இந்த இருவரைப் பற்றிய பார்வையாளர்களின் கருத்தைக் கேட்பதையும், அவர்களின் திறன்களை முன்னிலைப்படுத்துவதையும் டிரம்ப் வழக்கமாகக் கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பு அறையில் இருவரும் மாறி மாறிப் பங்கேற்று, டிரம்பின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தீவிரமாக ஆதரித்துப் பேசினர்.
தங்களுக்கு இடையே நெருங்கிய நட்புறவு நீடிப்பதாக ஜே.டி.வான்ஸ் மற்றும் மார்கோ ரூபியோ ஆகியோர் தொடர்ந்து கூறி வருகின்றனர். 2028 தேர்தலில் தாம் போட்டியிடுவது குறித்து வான்ஸ் இதுவரை உறுதிப்படுத்தாத நிலையில், ஜே.டி.வான்ஸ் போட்டியிட்டால் தாம் அந்தப் போட்டியில் நுழைய மாட்டேன் என்று மார்கோ ரூபியோ கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கருத்துக் கணிப்புகளில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதும், சில கணிப்புகளில் ரூபியோ முன்னிலை பெறுவதும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
2028 நவம்பர் 7 அன்று நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக இருக்க மாட்டார் என்பதால், 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு டிரம்ப் இல்லாத முதல் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வு இதுவாக இருக்கும். இடைக்காலத் தேர்தல்களுக்குப் பிந்தைய அரசியல் சூழல் மற்றும் நிர்வாகத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் ஆகியவற்றுக்கு இடையே, டிரம்பின் வாரிசு யார் என்ற விவாதம் அமெரிக்காவின் அடுத்த இரண்டு ஆண்டுகால அரசியலில் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.