இக்கட்டான சூழ்நிலையிலும் எனக்கு ஆதரவாக இருந்தார் என் கணவர் - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!

15 ஆண்டுகாலக் காதலுக்குப் பிறகு, கடந்த 2024 டிசம்பரில் கோவாவில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
KeerthySuresh -  AnthonyThattil
Published on: 
Summary

சக நடிகர்களுடன் தன்னை இணைத்துப் பரவிய தேவையற்ற வதந்திகள் தன்னை மிகவும் காயப்படுத்தியதாகவும், ஆனால் அந்த இக்கட்டான நேரங்களில் தனது கணவர் ஆண்டனி தட்டில் தனக்கு முழு நம்பிக்கையுடனும், பக்கபலமாகவும் நின்றதாகவும் நடிகை கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வதந்திகளும் கணவரின் புரிதலும்

இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள 'சத்யவான் சாவித்திரி' திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியின்போது ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த கீர்த்தி சுரேஷ், வாழ்க்கையில் தன்னை மிகவும் காயப்படுத்திய விஷயம் குறித்துப் பகிர்ந்துள்ளார்.

அதில், "மற்ற நடிகர்களுடன் என்னை இணைத்துப் பரவிய தேவையற்ற கிசுகிசுக்கள் என்னைக் காயப்படுத்தின; ஏனென்றால் நான் ஒரே ஒரு காதல் உறவில் மட்டுமே இருந்துள்ளேன். அந்த வதந்திகள் வந்தபோது, இதற்குப் பதிலளிக்க வேண்டுமா என்று மட்டுமே ஆண்டனி என்னிடம் கேட்டார்; ஒருபோதும் என்னைச் சந்தேகித்துக் கேள்வி எழுப்பவில்லை. நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கும்போது, வெளியில் இருப்பவர்களுக்கு நாங்கள் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா பயணத்தில் ஆண்டனியின் ஊக்கம்

மேலும், தனது கணவர் ஆண்டனி தட்டிலை ஒரு சிறந்த பண்பாளர் எனப் புகழ்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், தான் மனச்சோர்வடையும் போதெல்லாம் தன்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவது அவர்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, 'டோரதி' என்ற திரைப்படத்தில் நடிக்கத் தான் முடிவெடுத்தபோது, அது குறித்துப் பலரும் தயக்கம் காட்டிய நிலையிலும், அந்தப் படத்தில் துணிந்து நடிக்குமாறு ஆண்டனி தன்னை ஊக்கப்படுத்தியதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

15 ஆண்டுகால காதல்

கீர்த்தி சுரேஷ் 12-ஆம் வகுப்பு படிக்கும்போதே, தன்னை விட 7 வயது மூத்தவரான ஆண்டனி தட்டிலைக் காதலிக்கத் தொடங்கியுள்ளார். ஆண்டனி கத்தாரில் பணியாற்றியதால் சுமார் 6 ஆண்டுகள் இவர்களது காதல் 'Long-distance' உறவாகவே இருந்துள்ளது.

சுமார் 15 ஆண்டுகாலக் காதலுக்குப் பிறகு, கடந்த 2024 டிசம்பரில் கோவாவில் இவர்களது திருமணம் விமரிசையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

X