

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே போரின் தீவிரத்தன்மை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய மற்றும் போரின் வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான ட்ரோன் தாக்குதலை ரஷியா எல்லைக்குள் உக்ரைன் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரை இலக்கு வைத்து ரஷிய படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளன.
ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, உக்ரைன் ஏவிய 822 ட்ரோன்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷிய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியும், செயலிழக்கச் செய்தும் அழித்துள்ளன. ரஷியாவின் தெற்கு மற்றும் மேற்கு எல்லைப்புற மண்டலங்கள் உட்பட 17 பிராந்தியங்களில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
மாஸ்கோ பிராந்தியத்தை மட்டும் சுமார் 600 ட்ரோன்கள் வரை இலக்கு வைத்ததாகவும், அவற்றில் 187 ட்ரோன்கள் மாஸ்கோ நகரை அடையும் முன்னே சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் தெரிவித்துள்ளார்.
இந்த ட்ரோன் தாக்குதலில் ரஷியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Wildberries-க்குச் சொந்தமான கொலிடினோ லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மாஸ்கோவிற்கு தெற்கே 45 கி.மீ தொலைவில் சுமார் 2,500,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட கிடங்கு தீப்பற்றி எரிந்தது. வானளவு உயர்ந்த கருப்புப் புகையும் தீப்பிளம்புகளும் அப்பகுதியை உலுக்கின. இந்தத் தாக்குதல்களில் ரஷிய தரப்பில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உக்ரைனின் இந்த அதிரடித் தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரை அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பிறந்த ஊரான கிரிவி ரிஹ் நகரத்தைக் குறிவைத்து ரஷிய படைகள் ஏவுகணைகளை வீசின. அங்குள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் நாட்டின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி ஆலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். ஆலையின் மின் உற்பத்தி மற்றும் உற்பத்தி அலகுகள் சேதமடைந்ததால் அதன் செயல்பாடுகள் பகுதி அளவு முடங்கியுள்ளன.
உக்ரைன் தலைநகர் கெய்வ் மீதும் ரஷியா பேலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் சமீபகாலமாக 2,400 கி.மீ தொலைவு வரை பாயக்கூடிய அதிநவீன ட்ரோன் தொழில் நுட்பங்களை உருவாக்கி ரஷியாவின் வர்த்தக கிடங்குகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. இரு நாடுகளும் எல்லை தாண்டி வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதால், இந்தப் பகுதியில் போரின் தாக்கம் மேலும் தீவிரமடைந்துள்ளது.