168 மணி நேரம் இடைவிடாமல் நடனம்- கின்னஸ் சாதனைக்காக களமிறங்கிய நைஜீரிய நடனக் கலைஞர்.!

ஆப்பிரிக்க நடனத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தும் நோக்கிலும், அவர் லாகோஸில் இந்த ஏழு நாள் சவாலை மேற்கொண்டுள்ளார்.
Nigerian dancer |Benjamin Daniel
Published on: 

உலக சாதனை படைக்கும் முயற்சி

நைஜீரியாவின் பிரபல நடனக் கலைஞரும் நடன அமைப்பாளருமான பெஞ்சமின் டேனியல் கேப்ரியல், பென் டான்சர் என்ற பெயரில் அறியப்படுகிறார்.

33 வயதான அவர், லாகோஸில் கடந்த செப்டம்பர் 22-ந்தேதி இந்த நடன சவாலை தொடங்கினார். 168 மணி நேரத்தை நிறைவு செய்யும் பட்சத்தில் தற்போதைய தனிநபர் நடன மாரத்தான் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொழில்ரீதியாக நடன கலையை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது இந்த உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

ஆப்பிரிக்க நடன கலையை உலக அரங்கில் கொண்டு செல்வதே நோக்கம்

ஆப்பிரிக்க நடனக் கலையை உலக அரங்கில் கொண்டு செல்வதே தனது முயற்சியின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சாதனை 127 மணி நேரம் ஆகும். இதை இந்திய நடனக் கலைஞர் ஸ்ருஷ்டி சுதிர் ஜக்தாப், 2023-ஆம் ஆண்டு தனது 16 வயதில் நிகழ்த்தினார். அவரது நிகழ்ச்சி, இந்தியாவின் முக்கிய செவ்வியல் நடன வடிவங்களில் ஒன்றான கதக் நடனத்தை மையமாகக் கொண்டிருந்தது. இதை முறியடித்து உலக அரங்கில் சாதனை படைக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார்.

நடனத்திலும் நைஜீரிய கலாச்சாரம்

பென் டான்சர் நைஜீரியாவின் செழுமையான நடன மரபுகளையும், அதன் வேகமாக மாறிவரும் இணையக் கலாச்சாரத்தையும் தனது படைப்புகளாகப் பயன்படுத்தியுள்ளார்.

ஃபூஜி, ஜாஸ் மற்றும் ஸூக் உள்ளிட்ட இசை வகைகளுடன், ஆஃப்ரோபீட்ஸும் போன்ற இசை வகைகளுக்கு நடனமாடி வருகிறார். குறிப்பாக அவர் நடனமாடும் போது நடன ஆடைகளுக்குப் பதிலாக, தளர்வான அக்படா மற்றும் டாஷிகி உள்ளிட்ட பாரம்பரிய நைஜீரிய ஆடைகளை அணிந்து தனது காலச்சாரத்தை பிரதிபலிப்பை முன்னிறுத்தி வருகிறார்.

தயார் நிலையில் இருக்கும் மருத்துவ குழு

7 நாட்கள் தொடர்ந்து நடனமாடும் சவால் என்பதால், பெஞ்சமின் தனது உடல்நிலையை கவனமாக பராமரித்து வருகிறார். இதற்காக சவாலுக்கு முன்பாக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டதுடன், உணவு முறையிலும் மாற்றம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவையான நேரங்களில் அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com