

செங்கடல் பகுதியில் சவுதி அரேபியாவின் படைகளால் தாக்கப்பட்ட இந்திய சொகுசு கப்பலில் இருந்து 14 இந்தியர்களை மீட்டுள்ளதாக, யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தொடர்ச்சியான போர்ச் சூழல் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில், செங்கடல் பகுதியில் புதிய திருப்பமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. செங்கடலின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணை பகுதியில் அமைந்துள்ள சுகார் தீவின் அருகில் சென்று கொண்டிருந்த இந்திய சொகுசு கப்பல் ஒன்று மீது சவுதி அரேபியாவின் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குள்ளான கப்பலில் பயணம் செய்த 14 இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களும் ஹவுதி கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் ராணுவப் பேச்சாளர் யஹியா சரீ தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஹவுதி தரப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, சவுதி படைகள் நடத்திய இந்தத் தாக்குதல் சர்வதேச கடல் வழிப் போக்குவரத்துக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி மிரட்டல் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியர்களை மீட்கும் பணியில் தங்களது படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், செங்கடல் பகுதியில் இதுபோன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளில் சவுதி அரேபியா ஈடுபடுவதை சர்வதேச சமூகம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஹவுதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலக நாடுகளின் வர்த்தகம் அதிகம் நடைபெறும் முக்கிய கடல் மார்க்கத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹவுதிகளின் இந்த அறிவிப்பு உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள போதிலும், தாக்குதலுக்குள்ளான கப்பல் மற்றும் மீட்கப்பட்ட இந்தியர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வமான விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. மேலும், சவுதி அரேபியாவின் படைகள் தரப்பிலிருந்தோ அல்லது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தரப்பிலிருந்தோ இந்தச் சம்பவம் குறித்த முறையான உறுதிப்படுத்தல்களோ அல்லது விளக்கங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.
முன்னதாக சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் உள்ள விமான நிலையம் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட சூழலில், தற்போது செங்கடல் பகுதியில் இந்தியர்களின் சொகுசு கப்பல் தாக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள இந்தத் தகவல் மத்திய கிழக்கு வட்டாரத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.