

மதுரை:
மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நாளை நடக்கிறது.
நீட் தேர்வு எழுத மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 11,800 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,550 பேருக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்றவர்களுக்கு மதுரையில் உள்ள 20 மையங்களில் நாளை (6-ந் தேதி) தேர்வு நடைபெறுகிறது.
வெளி மாநிலங்களில் தேர்வு எழுத உள்ள மாணவர்களில் சிலர் நேற்று முன்தினமே புறப்பட்டுச் சென்றனர்.
நேற்றும் பலர் ரெயில்களில் புறப்பட்டனர். இன்று காலை திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் புறப்பட்டுச் சென்றனர்.
கடைசி நேரத்தில் புறப்பட்டதால் இட நெருக்கடியில் சிக்கித் தவித்தனர். மேலும் படிக்க வேண்டிய நேரத்தில் பயணம் செய்ய வேண்டிய திருப்பதால் மன உளைச்சலும் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 115 பேருக்கு கேரள மாநிலம் எர்ணா குளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் பஸ் மற்றும் ரெயில்களில் நேற்றே புறப்பட்டு சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 271 மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
இவர்களில் 270 பேர் தமிழகத்தில் உள்ள 11 மையங்களில் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா என்ற காவ்யாவுக்கு கேரள மாநிலம் எர்ணா குளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் நேற்று மாலை புறப்பட்டு சென்றார்.
மேலும் ராமநாதபுரம் தனியார் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.
இவர்களில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையைச் சேர்ந்த மாணவர் நியாஸ் அகமது, மாணவி ஆயிஷா உள்பட 15-க்கும் மேற்பட்டோர் சிக்கிம், ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு எழுத புறப்பட்டு சென்றனர்.