விற்பனைக்கு வைத்திருந்த 11 மான் கொம்புகள் பறிமுதல்: தொழிலாளி கைது

கேரள மாநிலம் பாலக்காடு அருகே விற்பனைக்கு வைத்திருந்த 11 மான் கொம்புகளை பறிமுதல் செய்த போலீசார் தொழிலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விற்பனைக்கு வைத்திருந்த 11 மான் கொம்புகள் பறிமுதல்: தொழிலாளி கைது
Published on: 

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முதலமடை செம்மனாம்பதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 49). தொழிலாளி. இவர் அங்குள்ள சோதனை சாவடி அருகே வசித்து வருகிறார். இவர் மான்கொம்புகளை கடத்தி விற்பனை செய்வதாக கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் அனிசுக்கு தகவல் கிடைத்தது.

தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தியாகராஜனின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். வீட்டில் 11 மான்கொம்புகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தியாகராஜனிடம் விசாரணை நடத்தியபோது நான் அடிக்கடி வனப்பகுதிக்குள் செல்வேன். அப்போது அங்கு கிடக்கும் மான்கொம்புகளை சேகரித்து பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழக பகுதிகளில் விற்று வந்தேன் என்று கூறினார்.

அவர் கூறியதில் திருப்பதியடையாத போலீசார் அவரை கைது செய்து 11 மான்கொம்புகளை பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் தியாகராஜனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வனப்பகுதியில் இறந்து கிடந்த மானின் கொம்புகளை சேகரித்தது உண்மையா? அல்லது வேட்டையாடி மான்கொம்புகள் சேகரிக்கப்பட்டதா? என்று தியாகராஜனிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com