பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் - மிதாலி ராஜ் அணி வெற்றி

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டிரைல் பிளாசர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது வெலா சிட்டி அணி. #WomenT20 #Velocity #Trailblazer
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் - மிதாலி ராஜ் அணி வெற்றி
Published on
ஜெய்ப்பூர்:

பெண்கள் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னோட்டமாக நடத்தப்படும் பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ், மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ், மிதாலி ராஜ் தலைமையிலான வெலா சிட்டி அணிகள் மோதுகின்றன. இந்திய வீராங்கனைகளுடன் வெளிநாட்டினரும் இடம் பெற்றுள்ள இந்த அணிகள் ஒவ்வொன்றும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.



இந்த போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் டிரைல் பிளாசர்ஸ்-வெலா சிட்டி அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த வெலா சிட்டி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டிரைல் பிளாசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்லீன் டியோல் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெலா சிட்டி அணி 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேனிலி வியாத் 46 ரன்னும், ஷபாலி வர்மா 34 ரன்னும், கேப்டன் மிதாலி ராஜ் 17 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சூப்பர் நோவாஸ்-வெலா சிட்டி அணிகள் சந்திக்கின்றன.  #WomenT20 #Velocity #Trailblazer 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com