

பனாஜி:
குஜராத் மாநிலத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட சென்ற அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கார் மீது கல் வீசப்பட்டது. இதில் அவரது கார் கண்ணாடிகள் உடைந்தன. இதுதொடர்பாக போலீசார் சிலரை கைது செய்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குஜராத்தில் ராகுல் காந்தி கார் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவா மகளிர் காங்கிரசார் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு வளையல்களை அனுப்பி வைத்து போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக, மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரதீமா கவுடினோ கூறுகையில், ’’குஜராத்தில் பா.ஜ.க.வினர் நடத்திய கல்வீச்சு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முக்கிய தலைவர்களான பிரதமருக்கும், தேசிய தலைவருக்கும் வளையல்களை கொரியரில் அனுப்பி வைத்துள்ளோம்.
பா.ஜ.க.வினருக்கு தைரியம் இருந்தால் அரசியல் ரீதியாக ராகுல் ஜியை எதிர்கொள்ளட்டும் பார்க்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.