

ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான மகளிர் பிக் பாஷ் லீக் தொடர் டிசம்பர் 9-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் இறுதிப் போட்டி நேற்று அடிலெய்டில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் கேப்டன் எலிசி வில்லானி, நிக்கோல் போல்டன் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். போல்டன் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த நட்டாலி ஸ்கிவர் 2 ரன்னிலும், மேகன் பாண்டிங் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
மற்ற வீராக்கனைகளும் சிட்னி அணியினரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பெர்த் அணி 20 ஓவர்கள் முடிவில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிட்னி அணி பந்துவீச்சில் சாரா காய்ட் 3 விக்கெட்களும், எரின் பர்ன்ஸ் 2 விக்கெட்களும், சாரா அலே, கிம் கார்த், எலிஸ் பெர்ரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்ஸர்ஸ் அணியி்ன் அலிசா ஹீலி, எலிஸ் பெர்ரி ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர். அலிசா 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து எலிஸ் பெர்ரி உடன் அஷ்லீங் கார்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் சிட்னி சிக்ஸ்ர்ஸ் அணி 15 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 100 ரன்கள் எடுத்தது. இதனால் சிட்னி அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மூன்று விக்கெட் வீழ்த்திய சிட்னி அணியின் சாரா காய்ட் ஆட்டநாயகி விருதை பெற்றார்.