

விம்பிள்டன் டென்னிஸ் திருவிழாவில், பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சும், தரவரிசையில் 15-வது இடம் வகிக்கும் ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவும் இன்று கோதாவில் இறங்குகிறார்கள். ஏற்கனவே 5 முறை விம்பிள்டனை வென்று இருக்கும் 37 வயதான வீனஸ் வில்லியம்ஸ், இந்த முறையும் மகுடம் சூடினால் ‘ஓபன் எரா’ வரலாற்றில் அதிக வயதில் ‘கிராண்ட்ஸ்லாம்’ வென்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி விடுவார்.
அதே சமயம் 2015-ம் ஆண்டில் இறுதி ஆட்டத்தில் தோற்றிருந்த 23 வயதான முகுருஜா முதல் முறையாக விம்பிள்டனை வெல்வதில் தீவிர முனைப்புடன் உள்ளார். 2016-ம்ஆண்டின் சாம்பியனான வீனசின் சகோதரி செரீனா வில்லியம்ஸ் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். அவர் நேற்று கூறுகையில், ‘நான் ஆடாவிட்டாலும் விம்பிள்டன் போட்டி களத்தில் வீனசுடன் இருப்பதாக உணர்கிறேன்.
அவர் நிச்சயம் பட்டத்தை வெல்வார் என்று நம்புகிறேன். அவருக்கும் அந்த நம்பிக்கை இருக்கும். இது போன்ற தருணங்களுக்காகத்தான் நாங்கள் பல ஆண்டுகளாக கடினமாக உழைக்கிறோம். அவரை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். உடல்நிலை பாதிக்கப்பட்டு அதில் இருந்து போராடி மீண்டு வந்திருக்கிறார். வியப்புக்குரிய ஒரு பெண்மணி வீனஸ் வில்லியம்ஸ்’ என்றார்.