

சென்னை:
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இணைவதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு பதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் 3 பேரும் தற்போது எம்.பி., எம்.எல்.ஏ. என எந்த பதவியிலும் இல்லை. இரு அணி இணையும்போது இவர்களுக்கு என்ன பதவியை வாங்கி கொடுப்பது என ஓ.பி.எஸ். திணறி வருகிறார்.
இது தொடர்பாக நேற்று நடந்த ஆலோசனையில் 3 பேருக்கும் ராஜ்யசபா எம்.பி. பதவி கேட்டு பெறலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ராஜ்ய சபா எம்.பி. பதவி 2019-ம் ஆண்டு ஜூலை மாதம்தான் காலியாகிறது.
தற்போது கனிமொழி (தி.முக.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), அ.தி.மு.க.வில் டி.ரத்தினவேல். லட்சுமணன், மைத்ரேயன், ஆர்ஜுன் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேர் எம்.பி.யாக உள்ளனர்.
இவர்கள் பதவி 2019-ல் முடிவடையும்போதுதான் புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க முடியும். அதற்கு முன்பே பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2019 மே மாதம் வந்து விடும்.
எனவே அதுவரை காத்திருக்க முடியாது என்பதால் வேறு ஏதாவது பதவி வாங்கி தருமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.
கே.பி.முனுசாமிக்கு வாரிய தலைவர் பதவி கேட்டு பெறலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது. இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
மேலும் முதல்-அமைச்சர் பதவி ஓ.பி.எஸ்.சுக்கு கொடுத்தால் மட்டுமே இணைப்புக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இதற்கு சாதகமான பதில் வரவில்லை.
ஓ.பி.எஸ். அணியில் இணைப்பு பேச்சுவார்த்தையில் நிர்வாகிகளுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதிவரை சமரச முடிவு எட்டப்படவில்லை.
இதேபோல் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு இணையாக அரசியல் நடத்த பதவி தருமாறு பேச்சுவார்த்தையில் வலியுறுத்தி வந்தார். இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்து தெரிவித்து வந்ததால் கூட்டத்தில் ஒருங்கிணைந்த முடிவு எதுவும் எடுக்க முடியவில்லை.
இதனால் இணைப்பு முயற்சி இழுபறியாகி விட்டது. இன்றும் ஓ.பி.எஸ். வீட்டில் நிர்வாகிகள் கூடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.